’போராட்டத்தை கைவிட்டு உடனே பணிக்கு திரும்புங்க’..!! சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு..!!
கொல்கத்தா பெண் மருத்துவர் படுகொலையை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், உடனே பணிக்கு திரும்ப சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தால், ஆத்திரமடைந்த பொதுமக்கள், சம்பந்தப்பட்ட மருத்துவமனையை சூறையாடினர்.
சம்பவத்தை கண்டித்தும், உரிய பாதுகாப்பு கோரியும் நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இது தொடர்பான வழக்கை கொல்கத்தா ஐகோர்ட் உத்தரவு படி, சிபிஐ விசாரித்து வருகிறது. போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட் தாமாக முன்வந்து விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், “கொல்கத்தா மருத்துவக் கல்லூரி பயிற்சி பெண் மருத்துவர் கொலை சம்பவத்தில், மேற்கு வங்க அரசின் செயல்பாடு அதிருப்தி அளிக்கிறது. வழக்கு விசாரணை அறிக்கையை சிபிஐ சமர்ப்பிக்க வேண்டும்' என உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு இன்று (ஆகஸ்ட் 22) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மருத்துவர்கள் போராட்டத்தை கைவிட்டு, உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும்.
போராட்டத்தால் ஏழை மக்கள் பாதிக்கப்படுவதை கவனிக்காமல் இருக்க முடியாது. மருத்துவர்கள் பணிக்கு மீண்டும் செல்வதை உறுதி செய்ய வேண்டும். மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய குழு அமைக்க வேண்டும். மருத்துவர்கள் பணிக்குத் திரும்பாவிட்டால், அவர்கள் விடுப்பு எடுத்தவர்களாகத்தான் கருதப்படுவர். மனிதாபிமானமற்ற முறையில் மருத்துவர்கள் 36 மணி நேரத்திற்கும் மேலாக வேலை வாங்கப்படுகின்றனர். மருத்துவர்களின் பணி நேரத்தை ஒழுங்குபடுத்துவது குறித்து குழுவினர் ஆய்வு செய்ய வேண்டும்” என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Read More : தவெக கட்சிக் கொடியின் அர்த்தம் என்ன தெரியுமா..? இவ்வளவு பெரிய வரலாறே இருக்கா..?