”ஜெயலலிதாவின் சொத்து, நகைகளை என்கிட்ட கொடுங்க”..!! ஜெ.தீபா தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பு..!!
தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரும் தனது அத்தையுமான ஜெயலலிதாவின் சொத்துக்களையும், நகைகளையும் தன்னிடம் ஒப்படைக்கக் கோரி அவருடைய அண்ணன் மகள் ஜெ.தீபா மனுதாக்கல் செய்த நிலையில், அந்த மனுவை கர்நாடக உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
சொத்துக் குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நகைகள், கர்நாடக அரசின் கருவூலத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த நகைகளை கர்நாடகா அரசு தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. ஆனால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அப்போது தீபா தரப்பில் 400 பக்க அடங்கிய எழுத்துப்பூர்வ கோரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணை ஜனவரி 13ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. அந்த வகையில், இன்றைய தினம் இன்று விசாரணை முடிவடைந்து தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்த தீர்ப்பில், ஜெயலலிதாவின் சொத்துகளை தங்களிடம் ஒப்படைக்க கோரி தீபா தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
சிறப்பு நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் மிகத் தெளிவாக சொத்துக்கள் அனைத்தும் அரசு பறிமுதல் செய்ய வேண்டும் என குறிப்பிட்டிருந்தது. இந்த வழக்கில் இணைத்துள்ள சொத்துக்களை தவிர மற்றவை குறித்து மேல்முறையீடு செய்ய உச்சநீதிமன்றத்தை நாட ஜெ.தீபாவுக்கு கர்நாடகா உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
Read More : தமிழ்நாட்டில் மீண்டும் வெளுத்து வாங்கப் போகும் கனமழை..!! நாளை இந்த 3 மாவட்டங்களுக்கும் எச்சரிக்கை..!!