புதுச்சேரி | நாட்டையே உலுக்கிய சிறுமி படுகொலை விவகாரம்: குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த போலீசார்.!
புதுச்சேரியை உலுக்கிய சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகையை போலீஸார் இன்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
புதுச்சேரியில் உள்ள சோலை நகரில் கடந்த மாதம் 5 ஆம் வகுப்பு பயின்று வந்த சிறுமி ஆர்த்தி (வயது 9) திடீரென காணாமல் போனார். மூன்று நாட்களாக தேடி வந்த நிலையில், ஆர்த்தி அம்பேத்கர் நகர்ப் பகுதியில் உள்ள வாய்க்காலில் கை மற்றும் கால்கள் கட்டப்பட்டு போர்வையால் உடல் சுற்றப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
விசாரணையில் அந்தப் பகுதியைச் சேர்ந்த கருணாஸ் என்ற 19 வயது இளைஞன் மற்றும் அவனுடன் விவேகானந்தன்(59) என்ற இரண்டு பேரும் சேர்ந்து சிறுமியை கடத்திச் சென்று விவேகானந்தன் வீட்டில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளனர். அப்போது சிறுமி மயங்கி விழுந்துள்ளார். இதனால் அவரை கொலை செய்து மூட்டையில் கட்டிச் சாக்கடையில் வீசி இருப்பது தெரியவந்தது.
தமிழகம் முழுவதும் இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்தது. போக்சோ சட்டத்தின் கீழ் 60 நாட்களுக்குள் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட வேண்டும் என்ற நிலையில் இந்தச் சம்பவம் நிகழ்ந்து நாளையோடு அறுபதாவது நாளை தொட இருக்கிறது. இந்நிலையில் தற்போது போலீசார் 500 பக்கம் கொண்டு குற்றப்பத்திரிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.
குற்றப்பத்திரிகையை கிழக்கு கண்காணிப்பாளர் லட்சுமி சவுஜன்யா, ஆய்வாளர் கண்ணன் ஆகியோர் தாக்கல் செய்தனர். புதுச்சேரி சிறுமி வழக்கின் குற்றப்பத்திகை தாக்கல் செய்யப்பட்டதால், வழக்கு விசாரணை வேகமெடுக்கும் என்றும், விரைவில் தீர்ப்பு அளிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.