ஐநா அமைதிப்படை வீரர்களை உடனடியாக வெளியேற்றுங்கள்!. நெதன்யாகு எச்சரிக்கை!
Netanyahu warning: லெபனானில் ஹிஸ்புல்லா படையினர் ஐநா அமைதிப்படை வீரர்களை பிணைக்கைதிகளாக பிடித்துச் செல்லும் அச்சுறுத்தல் இருப்பதால் உடனடியாக அவர்கள் அங்கிருந்து வெளியேற வேண்டும் என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக லெபனானை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இஸ்ரேல் ராணுவமும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தநிலையில், கடந்த 11ம் தேதி தெற்கு லெபனானில் உள்ள ஐ.நா., இடைக்காலப் படை தலைமையகம் மற்றும் ஐ.நா., அமைதிப்படை நிலைகளின் மூன்று தளங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதில் அமைதிப்படை வீரர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக ஐ.நா., கூறியிருந்தது.
இந்தநிலையில், 2வது முறையாக நேற்றும் ஐநா அமைதிப்படை வீரர்கள் தாக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, லெபனானில் ஹிஸ்புல்லா படையினர் ஐநா அமைதிப்படை வீரர்களை பிணைக்கைதிகளாக பிடித்துச் செல்லும் அச்சுறுத்தல் இருப்பதால் உடனடியாக அவர்களை அங்கிருந்து வெளியேற்ற வேண்டுமென ஐநா பொதுச் செயலாளர் கட்டரசிடம் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு வலியுறுத்தி உள்ளார். அமைதிப்படையில் 34 நாடுகளைச் சேர்ந்த 10,000 வீரர்கள் உள்ளனர். இதில் இந்திய வீரர்கள் 900 பேர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஈரானுக்கு எதிரான தாக்குதலில் ஒருபகுதியாக ஈரான் மீது இஸ்ரேல் சைபர் தாக்குதலை தொடங்கி உள்ளது. ஈரானின் சட்டத்துறை, நிர்வாகத்துறை, எரிபொருள் விநியோகம், நகராட்சி, போக்குவரத்து தொடர்பான இணையதளங்கள் உள்பட பல்வேறு முக்கிய துறைகள் மீதான சைபர் தாக்குதலால் ஈரான் அரசு முடங்கி போயுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் ஈரான் அணுசக்திதுறையின் ரகசிய தகவல்களை இஸ்ரேல் திருடி உள்ளதாகவும் கூறப்படுகிறது.