கொல்கத்தா மருத்துவர் கொலை.. கூட்டு பாலியல் வன்புணர்வா? மரபணு சோதனையில் வெளியான பகீர் தகவல்..!!
மரபணு மற்றும் தடயவியல் சோதனைகள் மூலம் பெண் மருத்துவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கொல்கத்தாவில் அரசால் நடத்தப்படும் ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் 31 வயதான பெண் ஜூனியர் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. நாடு முழுவதும் மருத்துவர்கள் மட்டுமின்றி பல்வேறு அமைப்பினரும் போராட்டத்தில் உயிரிழந்த பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதிசெய்ய தக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்தன.
இந்த வழக்கு கொல்கத்தா போலீசாரிடம் இருந்து தற்போது சிபிஐ வசம் உள்ளது. இதுவரை சஞ்சய் ராய் என்பவர் மட்டும் கைது செய்யப்பட்டு விசாரணையில் உள்ளார். அவரை திட்டமிட்டு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்திருக்கலாம் எனக் கூறப்பட்டு வந்தது. பெண்ணின் பிறப்புறுப்பில் இருந்து 150 கிராம்/மில்லி கிராம் அளவுக்கு விந்தணு இருந்ததாகவும் பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், பெண் மருத்துவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மரபணு மற்றும் தடயவியல் சோதனைகள் மூலம், கூட்டு பாலியல் வன்கொடுமை நடைபெறவில்லை என்பதை சிபிஐ அதிகாரிகள் உறுதி செய்திருபப்தாகவும், சஞ்சய் ராய் ஒருவர் மட்டுமே இந்த குற்றத்தில் ஈடுபட்டிருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த வழக்கு விசாரணையில், இதுவரை வேறு யாருக்கும் தொடர்பிருப்பதற்கான எந்த தடயமும் கிடைக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.