'அமரன்' படத்தை திரையிட்ட திரையரங்கு; பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்கள்..
தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட படம் "அமரன்". இந்த படத்தை, இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கி இருந்த நிலையில், உலக நாயகன் கமலஹாசன் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் தயாரித்திருந்தார். ரஜினிகாந்த், சூர்யா, ஜோதிகா, சிம்பு, அனிருத் உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் பலரும் படத்தைப் பாராட்டி இருந்தனர். ரசிகர்களின் மத்தியில் இந்த படம் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தாலும், சிலர் இந்த திரைப்படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அந்த வகையில், இந்த திரைப்படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்லையில் கடந்த சில நாட்களுக்கு முன் எஸ்டிபிஐ கட்சியினர் முற்றுகை போராட்டம் நடத்தினர். மேலும், இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போலீஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
திருநெல்வேலி மேலப்பாளையம் பிரதான சாலையில் உள்ள அலங்கார் திரையரங்கில் 'அமரன்' திரைப்படம் திரையிடப்பட்ட நிலையில், சனிக்கிழமை அதிகாலையில் திரையரங்க வளாகத்தில் அடையாளம் தெரியாத இருவர் பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு தப்பி ஓடியுள்ளார். இந்த சம்பவம், திருநெல்வேலியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மேலப்பாளையம் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அங்குள்ள சிசிடிவி கேமரா பதிவு காட்சிகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை நடத்தினர். மேலும், தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்தனர். இந்நிலையில், இரு நபர்கள் பெட்ரோல் குண்டுகளை திரையரங்கில் வீசுவது போன்ற சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
Read more: “ஒரு அப்பாவி கூட்டம் உங்களுக்கு ரசிகர்களாக உள்ளது”; தனுஷ் பற்றிய உண்மையை வெளியிட்ட விக்னேஷ் சிவன்..