'பைப் மூலம் வீட்டிற்கே கேஸ்'..!! தொடங்கியது புக்கிங்..!! உங்களுக்கும் வேண்டுமா..?
தமிழ்நாட்டில் பைப் மூலம் வீட்டிற்கே கேஸ் வழங்கும் திட்டம் கொண்டு வரப்பட உள்ளது.
உங்கள் வீடுகளில் சமையல் அறைகளில் குழாய் மூலம் எரிவாயு இணைப்புகளைப் பெற முடியும் என்று சொன்னால், வியப்பாக இருக்கிறதா..? சென்னையில் உள்ள குடியிருப்புகளில் இதற்கான ரிஜிஸ்டிரேஷன் தொடங்கியுள்ளது. இதுவரை 30,000-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் தலா ரூ.576 செலுத்தி PNG-க்கு பதிவு செய்துள்ளன. இந்தாண்டு இறுதிக்குள் சென்னையில் இது விரைவில் நடைமுறைக்கு வரும்.
சென்னையில் உள்ள வீடுகளுக்கு PNG அல்லது பைபர் இயற்கை எரிவாயு எனப்படும் பைப் மூலம் வழங்கப்படும் இயற்கை எரிவாயு வழங்குவதற்கு தமிழ்நாடு அரசு முயற்சி எடுத்து வருகிறது. எண்ணூரில் உள்ள சிஎன்ஜி அல்லது சுருக்கப்பட்ட இயற்கை எரிவாயு முனையத்தில் இருந்து பைப்லைன்கள் அமைப்பதற்கான அனுமதிகளை ஏற்கனவே சாலை போக்குவரத்துத்துறையிடம் வாங்கியுள்ளனர். சென்னையிலும், திருவள்ளூரிலும் சுமார் 666 கி.மீ தூரத்துக்கு தனியார் நிறுவனம் மூலம் பாதைகள் அமைக்கப்படும் என்றும் எண்ணெய் துறையைச் சேர்ந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தண்ணீர், கழிவுநீர், மின்சாரம், இணையவசதி, தொலைபேசி இணைப்புகள் போன்ற முக்கியப் பாதைகள் சென்னை நகரச் சாலைகளின் கீழ் இயங்குவதால் இந்த பணிகள் மிகவும் கடினமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. அடுத்த 4 ஆண்டுகளில் சென்னை மற்றும் திருவள்ளூரில் சுமார் 33 லட்சம் வாடிக்கையாளர்களுக்கு PNG இணைப்புகள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. PNG இணைப்புகள் LPG ரெட்டிகுலேட்டட் இணைப்புகளில் கொடுக்கப்பட்டதைப் போலவே இருக்கும். மின்சாரம் போல வீடுகளில் ரெகுலேட்டரை திருகினால் கேஸ் கிடைக்கும். இதற்கு மீட்டர் பொருத்தப்பட்டு அதன் அடிப்படையில் கட்டணம் செலுத்த வேண்டும்.