மொட்டை மாடியில் கஞ்சா செடி..!! ரீல்ஸ் வீடியோ போட்டு சிக்கிக் கொண்ட ஆர்வக்கோளாறு தம்பதி..!! ரெய்டு விட்ட போலீஸ்..!!
பெங்களூருவில் வீட்டின் மாடி தோட்டத்தில் கஞ்சா செடி வளர்த்து வந்த தம்பதியர், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து ரீல்ஸ் வெளியிட்டு வந்த நிலையில், தங்களது தோட்டத்தையும் ஆர்வக்கோளாறில் ரீல்ஸ் வீடியோவாக வெளியிட்டனர். இதையடுத்து, தோட்டத்தில் கஞ்சா செடிகள் இருப்பதைப் பார்த்த போலீசார் தம்பதியைக் கைது செய்தனர்.
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் சிக்கிம் மாநிலத்தைச் சேர்ந்த சாகர் குருங் (37) மற்றும் அவரது மனைவி ஊர்மிளா குமாரி (38) ஆகியோர் பாஸ்ட்புட் கடையை நடத்தி வருகின்றனர். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஊர்மிளா குமாரி, தனது பேஸ்புக்கில் அடிக்கடி வீடியோ மற்றும் புகைப்படங்களை பதிவிட்டு வந்துள்ளார். அந்த வகையில், தனது வீட்டின் பால்கனியில் உள்ள பூந்தொட்டிகளில் வளரும் விதவிதமான செடிகளின் வீடியோ மற்றும் படங்களை பேஸ்புக்கில் அவர் வெளியிட்டார்.
ஊர்மிளா பதிவிட்ட 17 பூந்தொட்டிகளில் இரண்டு தொட்டிகளில் கஞ்சா செடி பயிரிட்டிருந்தார். ஊர்மிளாவை பேஸ்புக்கில் பின்தொடர்பவர்கள் அந்த புகைப்படத்தில் கஞ்சா செடி இருப்பதை கண்டறிந்து போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து, போலீசார் சாகர் மற்றும் ஊர்மிளாவை கைது செய்தனர். அவர்களிடம், இருந்து கஞ்சா செடிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அதிக பணம் சம்பாதிப்பதற்காக கஞ்சா பயிரிட்டோம் என்று தெரிவித்ததாக போலீசார் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, இந்த தம்பதியை போலீசார் ஜாமீனில் விடுவித்தனர்.