சூதாட்ட செயலி விவகாரம்... முன்னாள் முதல்வர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்...! ED அதிரடி நடவடிக்கை...!
மகாதேவ் சூதாட்ட செயலி விவகாரத்தில் சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் பாகெல் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.
சத்தீஸ்கரை சேர்ந்த சவுரப் சந்திரகரும் அவர் நண்பர் ரவி உப்பாலும் துபாயில், மகாதேவ் என்ற பெயரில் சூதாட்ட செயலியை உருவாக்கினர். இதன்படி கிரிக்கெட் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளின் பெயரில் சூதாட்டம் நடத்தப்பட்டது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் மகாதேவ்செயலியின் உரிமையாளர் சவுரப் சந்திரகரின் திருமணம் துபாயில் நடந்தது. இதற்காக ரூ.260 கோடி செலவிடப்பட்டது. இந்த விழாவில் பாலிவுட் நடிகர், நடிகைகள் பலர் பங்கேற்றனர். அவர்களுக்கு ஹவாலா முறையில் பெரும் தொகை கைமாறியதாக சொல்லப்படுகிறது.
துபாயில் நடைபெற்ற சவுரப் சந்திரகரின் திருமணம் மூலம் மகாதேவ் செயலி வாயிலாக ரூ.5,000 கோடி அளவுக்கு மோசடி நடைபெற்றிருப்பது அமலாக்கத் துறைக்குத் தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து சவுரப் சந்திரகருடன் தொடர்புடைய அனைத்து நடிகர், நடிகைகளையும் அமலாக்கத் துறை ஒருபுறம் விசாரித்து வருகிறது.
அதே போல இந்த செயலி மூலம் தினமும் ரூ.200 கோடி லாபம் ஈட்டிய அவர்கள், அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகளுக்கு பெரும் தொகையை லஞ்சமாக வழங்கி வந்துள்ளனர். சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகெலுக்கு, அம்மாநில சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு இவர்கள் ரூ.508 கோடி வழங்கியதாக அமலாக்கத் துறை குற்றம்சாட்டியது. தற்போது மகாதேவ் சூதாட்ட செயலி விவகாரத்தில் சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் பாகெல் மீது அமலாக்கத்துறை, துணை குற்றப்பத்திரிக்கையைத் தாக்கல் செய்துள்ளது.