மக்களே...! இன்று முதல் அக்டோபர் 18-ம் தேதி வரை... வீடு வீடாக வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு...!
இன்று முதல் அக்டோபர் 18-ம் தேதி வரை, வீடு வீடாக சென்று வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு நடைபெற உள்ளது.
அடுத்த ஆண்டு ஜனவரி 1-ம் தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, இன்று முதல் அக்டோபர் 18-ம் தேதி வரை, வீடு வீடாக சென்று வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல், வாக்குச்சாவடி மறு சீரமைப்பு, உள்ளிட்ட பணிகளை மேற்கொள்கின்றனர். வரைவு வாக்காளர் பட்டியல் அக்டோபர் 29-ம் தேதி வெளியிடப்பட்டு அன்றிலிருந்து நவம்பர் 28-ம் தேதிவரை பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல் உள்ளிட்டவற்றுக்கான விண்ணப்பங்கள் பெறப்படும்.
விண்ணப்பங்கள் வரும் டிசம்பர் 24-ம் தேதிக்குள் பரிசீலிக்கப்பட்டு, 2025-ம் ஆண்டு ஜனவரி 6-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். எனவே, அக்டோபர் 29 முதல் நவம்பர் 28-ம் தேதி வரை, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படவோ அல்லது வாக்காளர் பட்டியலில் ஏற்கனவே இடம்பெற்றுள்ள பதிவுகளில் நீக்கம் , திருத்தங்கள், இடமாற்றம் செய்யவோ அல்லது ஆதார் எண்ணை இணைக்க விரும்பும் வாக்காளர், தகுதியுள்ள குடிமக்கள், படிவங்கள் 6, 6பி, 7 அல்லது 8 ஆகியவற்றைப் பூர்த்தி செய்து வழங்கலாம்.
வயதுக்கான சான்றாக, பிறப்பு சான்றிதழ், ஆதார், பான் அட்டை, ஓட்டுநர் உரிமம், பிறந்த தேதியுடன் கூடிய 10-ம் வகுப்பு அல்லது பன்னிரெண்டாம் வகுப்பு சான்றிதழ்கள், கடவுச்சீட்டு ஆகியவற்றை அளிக்கலாம். 25- வயதுக்கு கீழ் உள்ள விண்ணப்பதாரர்கள் வயது சான்றிதழை அளிக்க வேண்டியது கட்டாயம். மேலும், https://voters.eci.gov.in/, ஆகிய இணையதள முகவரி மற்றும் “வாக்காளர் உதவி" கைபேசி செயலி (VOTER HELPLINE Mobile App) ஆகியவற்றின் மூலம் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.