செல்வமகள் சேமிப்பு திட்டம் முதல் ஜிஎஸ்டி வரி உயர்வு வரை..!! நாளை முதல் அமலுக்கு வரும் புதிய விதிகள்..!!
நாளை ஜனவரி 1ஆம் தேதி முதல் செல்வமகள் சேமிப்பு திட்டம் தொடங்கி பல விஷயங்களில் மாற்றங்கள் ஏற்பட உள்ளன. அதுகுறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
அகவிலைப்படி :
அகவிலைப்படி உயர்வு ஜனவரி மாதம் அமலுக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜனவரி மாதமே அடிப்படை சம்பளத்துடன் DA விரைவில் இணைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. அதாவது, அடிப்படை சம்பளம் - டிஏ இரண்டும் ஒன்றாக இணைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக 2004ஆம் ஆண்டு அகவிலைப்படி 50 சதவீதத்தை எட்டிய பிறகு, அடிப்படை ஊதியத்துடன் DA இணைக்கப்பட்டது.
ஆனால், சில மாதங்களாக அகவிலைப்படி 50% அளவை மீறிய போதிலும், அடிப்படை ஊதியத்துடன் DA இணைக்கப்படாது என்ற நிலைப்பாட்டை மத்திய அரசு கடைப்பிடித்து வருகிறது. இந்நிலையில் தான், அடிப்படை சம்பளத்துடன் DA விரைவில் இணைக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
செல்வ மகள் சேமிப்புத் திட்டம் :
பொது வருங்கால வைப்பு நிதி (பிபிஎஃப்) கணக்கை முறைப்படுத்துவதற்கான புதிய விதிகள், சுகன்யா சம்ரித்தி யோஜனா மற்றும் தபால் அலுவலகங்கள் மூலம் செயல்படும் பிற சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான புதிய விதிகள் நிதி அமைச்சகத்தால் அறிவிக்கப்பட உள்ளன. தற்போதைய வட்டி விகிதங்களை மாற்ற வாய்ப்புகள் உள்ளன. பொது வருங்கால வைப்பு நிதி, மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் (SCSS), சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY), தேசிய சேமிப்பு சான்றிதழ் (NSC), மகிளா சம்மான் சேமிப்பு சான்றிதழ் மற்றும் தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டம் (POMIS) உள்ளிட்டவற்றின் வட்டி விகிதம் மாற வாய்ப்புள்ளது.
ஜிஎஸ்டி வரி :
காற்று நிரப்பப்பட்ட பானங்கள், சிகரெட்டுகள், புகையிலை தொடர்புடைய பொருட்கள் மீதான ஜிஎஸ்டியை 28%இல் இருந்து 35 சதவீதமாக உயர்த்த முடிவு செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இது ஜனவரி மாதம் முதல் அமலுக்கு வரலாம். அதேபோல் ரூ.1,500 வரையிலான ஆயத்த ஆடைகளுக்கு 5% ஜிஎஸ்டியும், ரூ.1,500 முதல் ரூ.10,000 வரை உள்ள ஆடைகளுக்கு 18% வரி விதிக்கப்படும். 10,000 ரூபாய்க்கு மேல் உள்ள ஆடைகளுக்கு 28 சதவீதம் வரி விதிக்கப்படும்.
மொத்தத்தில், ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு 148 பொருட்களுக்கான வரி விகிதங்களை மாற்ற முடிவு செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த முடிவுகள் ஜனவரி மாதம் ஜிஎஸ்டி கவுன்சிலில் ஆலோசிக்கப்பட்டு இறுதி செய்யப்படும். ஜிஎஸ்டி கவுன்சில் முடிவுக்கு பிறகே இந்த வரி விகிதங்கள் அமலுக்கு வரும் என்று கூறப்படுகிறது.