இனி பாட புத்தகங்கள் இப்படிதான் இருக்கும்!… புத்தக பையின் எடையை குறைக்க அரசின் புதிய முயற்சி!… பெற்றோர்கள் வரவேற்பு!
கர்நாடகாவில் பள்ளி மாணவர்களின் புத்தக பையின் எடையை குறைக்கும் வகையில் அம்மாநில அரசு புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது.
பள்ளி மாணவர்களின் பாட புத்தக பையின் எடையை குறைப்பது குறித்து கடந்த 2019ம் ஆண்டு கர்நாடகா அரசு, குழு ஒன்றை அமைத்தது. இதில் கல்வி வல்லுநர்கள், குழந்தை மருத்துவர்கள், மருத்துவர்கள், சட்ட ஆலோசகர்கள் மற்றும் மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சித் துறையின் (DSERT) அதிகாரிகள் இடம்பெற்றிருந்தனர். இந்த குழு மாணவர்களின் கல்வி கற்றல் திறனை மேம்படுத்துவது குறித்து ஆய்வு செய்தது.
அதன்படி, எந்த வகுப்பு மாணவர்கள் எவ்வளவு எடை கொண்ட புத்தக பையை சுமக்க வேண்டும் என்பது குறித்த தெளிவான வரையறையையும் இக்குழு வெளியிட்டிருக்கிறது. அதன்படி 1 முதல் 2ம் வகுப்பு மாணவர்களுக்கு 1.5 முதல் 2 கிலோ எடை கொண்ட புத்தக பை போதுமானது. இதே 3-5ம் வகுப்பு மாணவர்களுக்கு 2-3 கி.கி, 6-8ம் வகுப்பு மாணவர்களுக்கு 3-4 கி.கி மற்றும் 9-10ம் வகுப்புகளுக்கு 4-5 கி.கி எடை கொண்ட புத்தக பை போதுமானது என கூறியுள்ளது.
அந்தவகையில், கர்நாடகாவின் 1-10ம் வகுப்பு வரை பயிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு இரண்டு பருவங்களாக புத்தகங்கள் பிரித்து வழங்கப்படும். அதற்கேற்றார் போல பாட புத்தகங்கள் இரண்டாக பிரிக்கப்படும். இது புத்தக பையின் எடையை 50 சதவிகிதம் குறைக்கும். இந்த அறிவிப்புக்கு கல்வியாளர்கள் மட்டுமல்லாது பெற்றோர்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.