For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

இனி தெருக்களில் மாடுகள் பிடிபட்டால் ஏலம் விடப்படும்- அமைச்சர் கே.என்.நேரு அறிவிப்பு..!

03:09 PM Jun 22, 2024 IST | Kathir
இனி தெருக்களில் மாடுகள் பிடிபட்டால் ஏலம் விடப்படும்  அமைச்சர் கே என் நேரு அறிவிப்பு
Advertisement

தெருவில் 3வது முறை மாடுகள் பிடிபட்டால் ஏலம் விடப்படும், பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு அறிவிப்பு.

Advertisement

தமிழ்நாடு சட்டமன்றத்தில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் கடந்த ஜூன் 20ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. 3வது நாளான இன்று நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. இதனையடுத்து சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, " சென்னையில் மக்கள் தொகை 89 லட்சம் ஆகும், அவர்களுக்கு 200 வார்டுகள் மட்டுமே உள்ளன. சராசரியாக ஒரு வார்டுக்கு 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கூடுதலாக வசிக்கின்றனர். ஆகவே வார்டுகளை அதிகப்படுத்தி, மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

தெருக்களில் சுற்றித் திரியும் மாடு முதல் முறை பிடிபட்டால் ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும். இரண்டாம் முறையும் மாடு தெருக்களில் சுற்றித் திரிவது, தெரிய வந்து பிடிபட்டால், அபராத தொகை ரூ.10,000 வசூலிக்கப்படும். மேலும் மாடு தெருக்களில் சுற்றி திரியும் மூன்றாம் முறை பிடிபட்டால், அந்த மாடு பறிமுதல் செய்யப்பட்டு ஏலம் விட வழிவகை செய்யப்படும். மேலும் விதிமீறும் கால்நடை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை குறித்து விரைவில் சட்டம் கொண்டுவரப்படும். தெருக்களில் சுற்றித் திரியும் மாடுகளுக்கு மக்கள் அகத்திக்கீரை கொடுக்கின்றனர்" என்று கூறினார்.

தமிழகத்தில் நாய்கள் பொதுமக்களை கடிப்பது குறித்து பேசிய அமைச்சர் கே.என்.நேரு, "கொரோனா காலத்தில் நாய்களை சரிவர பராமரிக்காததால், தற்போது பிரச்சனை ஏற்பட்டுள்ளது. நாய்களுக்கு கருத்தடை செய்து அவை இனப் பெருக்கம் செய்யாமல் பார்த்துக் கொள்ளும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அண்மையில் புதிதாக அறிவிக்கப்பட்ட புதுக்கோட்டை, நாமக்கல், காரைக்குடி, திருவண்ணாமலை உள்ளிட்ட நான்கு நகராட்சிகள் 20 நாட்களுக்குள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும்"என்று கூறினார்.

மேலும், ரூ.76.30 கோடியில் மாநகராட்சி & நகராட்சி பேருந்து நிலையங்கள் மேம்படுத்தப்படும். கடலூர், தாமபுரம், திண்டுக்கல், கரூர், ஓசூர் ஆகிய மாநகராட்சிகளிலும், இராஜபாளையம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சிதம்பரம், விருத்தாச்சலம் உள்ளிட்ட 35 நகராட்சிகளிலும், ரூ.145.82 கோடியில் புதிய வணிக வளாகங்கள் அமைக்கப்படும்.

திருச்செங்கோடு, கொல்லங்கோடு, சொலிங்கர், கம்பம் ஆகிய நகராட்சிகளில் ரூ.45.50 கோடியில் புதிய பேருந்து நிலையங்கள் அமைக்கப்படும். ரூ.32 கோடியில் புதிய பயோ கேஸ் மையங்கள் அமைக்கப்பட்டு, ரூ.22.80 கோடியில் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள 38 பயோ கேஸ் மையங்கள் மேம்படுத்தப்படும். மேலும், ரூ.285.73 கோடியில், மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் 418.57 கி.மீ. நீள மண் சாலைகள், தார்சாலை, கான்கிரீட் அல்லது பேவர் பிளாக் சாலைகளாக தரம் உயர்த்தப்படும், என்று கூறினார்.

Advertisement