ரயில் முன்பதிவு முதல் சிலிண்டர் விலை வரை.. இன்று முதல் அமுலுக்கு வரும் புதிய விதிகள்..!!
இன்று நவம்பர் மாதம் தொடங்கவுள்ளது. ஒவ்வொரு மாத தொடக்கத்திலும், பெரும்பாலும் சில புதிய விதிகள் அறிமுகம் ஆகும். பழைய விதிகளில் சில மாற்றங்கள் செய்யப்படும். அந்த வகையில், நவம்பர் மாதம் 1 ஆம் தேதி முதல், பல புதிய விதிகள் நடைமுறைப்படுத்தப்பட உள்ளன. அதுகுறித்து இந்த பதிவில் காணலாம்.
ரயில் முன்பதிவு : நவம்பர் 1-ம் தேதி முதல் ரயில் டிக்கெட் முன்பதிவு விதிகள் மாற்றப்பட உள்ளன. இனி பயணிகள் ரயில் டிக்கெட்டுகளை முன்பு இருந்தது போல, 120 நாட்களுக்கு முன், முன்பதிவு செய்ய முடியாது. 60 நாட்களுக்கு முன்னர்தான் முன்பதிவு செய்ய முடியும். பயணிகளுக்கு டிக்கெட் முன்பதிவு செயல்முறையை எளிதாக்கும் வகையில் இந்திய ரயில்வே (Indian Railways) அட்வான்ஸ் டிக்கெட் முன்பதிவு விதிகளில் இந்த மாற்றத்தை செய்துள்ளது.
வங்கி விடுமுறை நாட்கள் : பண்டிகைகள் மற்றும் பொது விடுமுறைகள் காரணமாக நவம்பர் மாதத்தில் வங்கிகளுக்கு அதிக விடுமுறைகள் உள்ளன. இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவலின்படி, பல்வேறு மாநிலங்களில் வார விடுமுறை மற்றும் பண்டிகைகள் காரணமாக நவம்பர் மாதத்தில் 13 நாட்களுக்கு வங்கிகள் மூடப்பட்டிருக்கும். எனினும், இந்த விடுமுறை நாட்களில் வங்கி வாடிக்கையாளர்கள் வங்கியின் ஆன்லைன் சேவைகளையும் பயன்படுத்தலாம். இந்தச் சேவைகள் 24 மணி நேரமும் கிடைக்கும். இதனால் வாடிக்கையாளர்கள் தங்கள் அத்தியாவசிய வங்கிச் செயல்பாடுகள் மற்றும் பரிவர்த்தனைகளை எந்த இடையூறும் இன்றி மேற்கொள்ள முடியும்.
எல்பிஜி சிலிண்டர் விலை : ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் எண்ணெய் நிறுவனங்கள் எல்பிஜி சிலிண்டர் விலையை மாற்றுகின்றன. 14 கிலோ வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டரின் விலையில் நவம்பர் 1 ஆம் தேதி மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
ஏடிஎஃப், சிஎன்ஜி, பிஎன்ஜி விலைகள் : இது தவிர, எண்ணெய் நிறுவனங்கள் ATF (Air Turbine Fuel), CNG மற்றும் PNG ஆகியவற்றின் விலையையும் ஒவ்வொரு மாத தொடக்கத்திலும் மாற்றுகின்றன. சமீப மாதங்களில் ஏடிஎஃப் விலைகள் குறைந்துள்ளன. இந்த தீபாவளியில் விலைகள் மேலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிஎன்ஜி மற்றும் பிஎன்ஜி விலைகளிலும் மாற்றங்கள் இருக்கலாம்.
எஸ்பிஐ கிரெடிட் கார்டு : பாரத ஸ்டேட் வங்கியின் துணை நிறுவனமான எஸ்பிஐ கார்டு (SBI Card), கிரெடிட் கார்டு பயனர்களுக்கு சில புதிய விதிகளை அமல்படுத்த உள்ளது. நவம்பர் 1 முதல், அன்செக்யூர் எஸ்பிஐ கிரெடிட் கார்டுகளுக்கு மாதாந்திர நிதிக் கட்டணம் 3.75% ஆக இருக்கும். இதுமட்டுமின்றி, மின்சாரம் மற்றும் எரிவாயு போன்ற பயன்பாடுகளுக்கு 50,000 ரூபாய்க்கு மேல் பணம் செலுத்தினால் 1% கட்டணம் விதிக்கப்படும் என்பதையும் வங்கி வாடிக்கையாளர்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.