ஆனந்த் அம்பானி முதல் கீர்த்தி சுரேஷ் வரை.. 2024-ல் கவனம் ஈர்த்த பிரபலங்களின் திருமணங்கள்...
2024 ஆம் ஆண்டு முடிவடைய உள்ளது. இன்னும் சில நாட்களில் 2025-ம் ஆண்டு பிறக்க உள்ளது. இந்த ஆண்டில் இந்தியாவில் மிகப் பெரிய பிரபலங்களின் திருமணங்கள் சில நடந்துள்ளன. அந்த வகையில் 2024-ல் கவனம் ஈர்த்த சில பிரபலங்களின் திருமணம் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
டாப்ஸி பன்னு - மத்தியோஸ் போய்
டாப்ஸி பன்னு மற்றும் மத்தியாஸ் போயின் திருமணம் மார்ச் 23 அன்று உதய்பூரில் நடைபெற்றது. இது பாலிவுட்டின் அமைதியான திருமணங்களில் ஒன்றாகும். இந்த ஜோடி தங்கள் சொந்த கலாச்சார பாணியை பிரதிபலிக்கும் வகையில் திருமணம் செய்து கொண்டனர். மிகவும் நெருங்கிய நண்பர்கள் உறவினர்கள் மட்டுமே இந்த திருமணத்தில் கலந்து கொண்டனர். பெரிய கொண்டாட்டங்கள் ஏதுமின்றி, உதய்பூரில் இந்த ஜோடியின் திருமணம் பாரம்பரிய சடங்குகளை மையமாக வைத்து நடந்து முடிந்தது.
சோபிதா துலிபாலா மற்றும் நாக சைதன்யாவின் திருமணம் திரைத்துறையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நிகழ்வுகளில் ஒன்றாகும். டிசம்பர் 4, 2024 அன்று, ஹைதராபாத் அன்னபூர்ணா ஸ்டுடியோவில் பாரம்பரிய தெலுங்கு பிராமண விழாவில் சோபிதா துலிபாலா மற்றும் நாக சைதன்யா திருமணம் செய்து கொண்டனர். மெஹந்தி, ஹல்தி, திருமண விழா என இந்த ஜோடியின் திருமணம் களைகட்டியது.
ரகுல் ப்ரீத் சிங் - ஜாக்கி பக்னானி :
பிப்ரவரி 21, 2024 அன்று, நடிகை ரகுல் ப்ரீத் சிங் மற்றும் ஜாக்கி பக்னானி திருமணம் நடைபெற்றது. கோவாவில் ஒரு கடற்கரைக் கொண்டாட்டத்துடன் பாரம்பரிய இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். பல நாள் திருமண கொண்டாட்டங்களில் ஒரு சங்கீத், ஹல்டி, திருமணம், திருமண வரவேற்பு ஆகியவை அடங்கும். இந்த மகிழ்ச்சியான நிகழ்வில் பாலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
ஈரா கான் - நூபுர் ஷிகாரே
ஆமிர் கானின் மகள் ஈரா கான், தனது நீண்ட நாள் காதலரான, உடற்பயிற்சி பயிற்சியாளரான நூபுர் ஷிகாரேவை, ஜனவரி 3, 2024 அன்று திருமணம் செய்து கொண்டார். இந்த விழாவில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் கலந்து கொண்டனர். திருமணத்திற்குப் பிறகு, மும்பையில் பிரமாண்ட வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஷாருக்கான், கத்ரீனா கைஃப், மாதுரி தீட்சித் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்ட்
இந்த ஆண்டு இந்தியா மட்டுமின்றி சர்வதேச அளவில் கவனம் ஈர்த்த திருமணம் என்றால் அது முகேஷ் அம்பானி மகன் ஆனந்த் அம்பானியின் திருமணம் தான். ஜூலை மாதம் முழுவதுமே அம்பானி வீட்டு திருமணம் களைகட்டியது. ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட்டின் திருமணம், இந்தியாவின் மிக ஆடம்பரமான கொண்டாட்டங்களில் ஒன்றாகும்.
ஆடம்பரமான கொண்டாட்டங்களுடன் பல நாட்கள் நடந்த திருமண நிகழ்வில் பல்வேறு சர்வதேச பிரபலங்கள், தொழிலதிபர்கள் பிரபல பாலிவுட் நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். கலாச்சார, ஆன்மீகம் அம்சங்களின் கலவையுடன் நடந்த இந்த திருமண விழாவில் சமகால ஆடம்பர மற்றும் பாரம்பரிய இந்து சடங்குகள் இடம்பெற்றன.
சித்தார்த் - அதிதி ராவ் ஹைதரி
பிரபல நட்சத்திர ஜோடிகளாக வலம் வந்த சித்தார்த் - அதிதி ராவ் ஹைதரி கடந்த செப்டம்பர் 16-ம் தேதி திருமணம் செய்து கொண்டனர். தெலுங்கானாவின் வனபர்த்தியில் உள்ள 400 ஆண்டுகள் பழமையான கோவிலில் தனிப்பட்ட முறையில் இந்த ஜோடியின் திருமணம் நடந்தது. நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் மட்டுமே இதில் கலந்து கொண்டனர்.
கீர்த்தி சுரேஷ் - ஆண்டனி தட்டில் :
நடிகை கீர்த்தி சுரேஷ் தனது நீண்ட நாள் காதலரான ஆண்டனி தட்டிலை திருமணம் செய்து கொண்டார். கடந்த 12-ம் தேதி கோவாவில் நடந்த இந்த திருமணத்தில் நெருங்கிய நண்பர்கள், குடும்பத்தினர் மட்டுமின்றி பல்வேறு பிரபலங்களும் கலந்து கொண்டனர். த.வெ.க தலைவரும் நடிகருமான விஜய், த்ரிஷா உள்ளிட்ட பிரபலங்கள் கீர்த்தி சுரேஷின் திருமண விழாவில் பங்கேற்றனர். முதலில் இந்து முறைப்படியும், பின்னர் கிறிஸ்தவ முறைப்படியும் இந்த ஜோடி திருமணம் செய்து கொண்டனர்.
Read More : Year Ender 2024 | உலக அளவில் தலைப்பு செய்திகளில் இடம்பெற்ற முக்கிய நிகழ்வுகள் இதோ..!!