1 முதல் 5ஆம் வகுப்பு வரை..!! ஆசிரியர்களுக்கு இலவச கையடக்க கணினி..!! பள்ளிக்கல்வித்துறை அதிரடி..!!
தமிழ்நாட்டில் 23 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு தொடக்கப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 13 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளிகளில் சுமார் 80,000 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருவதாக கூறப்படுகிறது. அரசு தொடக்கப் பள்ளிகளில் மாணவர்களுக்கு இலவச சீருடை, உணவு, பாடப் புத்தகங்கள், கல்வி உபகரணங்கள் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.
இந்நிலையில், 1 முதல் 5ஆம் வகுப்பு வரையிலான தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு டேப்லெட் (Tablet) எனப்படும் கையடக்க கணினி வழங்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதுகுறித்து ஆலோசனைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. செயல் வடிவம் பெறுவதற்கு இன்னும் நாட்கள் ஆகும் என்கின்றனர். இந்நிலையில், தமிழ்நாடு பாடநூல் கழகம் சார்பில் 79 ஆயிரம் டேப்லெட்கள் வாங்க ஒப்பந்தப் புள்ளிகள் கோரியுள்ளது.
அப்படியெனில் தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்ள முடியுமா? என்று கேட்கலாம். ஆம், என்று தான் அதிகாரிகள் தரப்பு கூறுகிறது. இதுவரை பின்பற்றப்பட்டு வரும் நடைமுறை என்பது அரசின் எல்காட் நிறுவனத்திடம் தான் ஒப்பந்தம் வழங்கப்படும். அவர்கள் தான் பள்ளிக் கல்வித்துறைக்கு தேவையான லேப்டாப், டேப்லெட் உள்ளிட்டவற்றை கொள்முதல் செய்து வழங்குவர். இம்முறை நேரடியாக ஒப்பந்தம் கோர திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.
இதன்மூலம் வெளி நிறுவனங்களுக்கு வாய்ப்பு உருவாகியுள்ளது. தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் டேப்லெட்கள் சில அம்சங்கள் முன்கூட்டியே பதிவேற்றம் செய்யப்பட இருக்கிறது. அதாவது, எண்ணும் எழுத்தும் திட்டத்தின் கையேடுகள், பாடக் குறிப்புகள், கற்பித்தல் சார்ந்த வீடியோக்கள் உள்ளிட்டவை டேப்லெட்டில் இடம்பெற்றிருக்கும். மாணவர்கள், ஆசிரியர்களின் செயல்பாடுகளை கண்காணிக்கும் வகையில் சிறப்பு மென்பொருள் ஒன்றும் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கும்.