’ரேஷனில் இலவசம்’..!! முதல்வரை மேடையில் வைத்துக் கொண்டு பிரதமர் செய்த சம்பவம்..!!
பிரதமர் மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக திருச்சி வந்தடைந்தார். அதன்பிறகு பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38-வது பட்டமளிப்பு விழாவில் 1,528 மாணவர்களுக்கு பட்டம் மற்றும் பதக்கங்களை வழங்கி பேசினார். இதையடுத்து, ரூ.1,112 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையத்தை பிரதமர் திறந்து வைத்தார். இந்நிகழ்வின்போது மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
இதையடுத்து, திருச்சியில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, ”எனது தமிழ் குடும்பமே (தமிழில் பேசினார்). எனது தமிழ் குடும்பத்திற்கு முதலில் எனது 2024 புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். தமிழ்நாட்டில் இந்த புத்தாண்டு அனைவருக்கும் மகிழ்ச்சியை கொடுக்கும். புத்தாண்டில் எனது முதல் நிகழ்ச்சி தமிழ்நாட்டில் நடைபெறுவது எனது பாக்கியம். தமிழ்நாட்டில் வளர்ச்சிக்காக சுமார் 20,000 ரூபாய் கோடி மதிப்பு திட்டங்களை வழங்கியுள்ளோம்.
2023இன் கடைசி 2 வாரங்கள் தமிழ்நாட்டில் பலருக்கும் ஆழ்ந்த துன்பத்தை கொடுத்துள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு மத்திய அரசு துணை நிற்கும். வெள்ள பாதிப்பின் போது அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்தது. கனமழையால் உயிரிழப்பு பொருட்கள் இழப்புகள் ஏற்பட்டன. இந்த துயரமான சூழலில் தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு உறுதுணையாக இருந்து வருகிறது” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், ”தேமுதிக தலைவர் விஜயகாந்தை இழந்தது உண்மையில் மிகப்பெரிய துன்பம். விஜயகாந்த் சினிமாவில் மட்டுமல்ல, அரசியலிலும் கேப்டனாக இருந்தவர். தேச நலனுக்கு மட்டுமே விஜயகாந்த் எப்போதும் முக்கியத்துவம் கொடுத்தார். திரைப்படங்களில் அவரது செயல்பாடு மூலம் மக்களின் உள்ளங்களை கொள்ளை கொண்டிருந்தார். அரசியல்வாதியாக தேசிய நலனை மட்டுமே முன் நிறுத்தினார். விஜயகாந்தின் மறைவு திரைத்துறைக்கு மட்டுமல்ல, அரசியலுக்கும் மக்களுக்கும் இழப்பு. விஜயகாந்த்தை இழந்த குடும்பத்திற்கும், தொண்டர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்” தெரிவித்தார்.
இதற்கிடையே, தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு குறைந்த நிதியை வழங்குவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டி வருகிறார். ஆனால், இன்று பேசிய பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலினை மேடையில் வைத்துக்கொண்டே, “வரலாறு காணாத வகையில், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு மத்திய அரசு இரண்டரை மடங்கு அதிக நிதி வழங்குகிறது. மத்திய அரசின் திட்டங்களால் தான் தமிழ்நாட்டு மக்களுக்கு ரேஷனின் இலவசமாக பொருட்கள் கிடைக்கின்றன” என்று பேசினார்.