கேஸ் சிலிண்டர் பயன்படுத்துவோருக்கு ரூ.50 லட்சம் வரை இலவச காப்பீடு..!! எப்படி விண்ணப்பிப்பது..?
சமையல் கேஸ் சிலிண்டர் பயன்படுத்துவோருக்கு ரூ.50 லட்சம் வரை காப்பீடு வழங்கப்படுகிறது. எதற்காக இந்தப் பணம் வழங்கப்படுகிறது? அதை எப்படி பெறுவது? என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
நாடு முழுவதும் ஏழை மக்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கும் "பிரதமரின் உஜ்வாலா யோஜனா" திட்டத்தை பிரதமர் மோடி கடந்த 2016 மே 1ஆம் தேதி தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ், சிலிண்டர் பெறுவதற்கான வைப்புத் தொகை உட்பட ரூ.1,600-ஐ மத்திய அரசு வழங்குகிறது. இந்த திட்டத்தின் பயனாளிகளுக்கு காஸ் அடுப்பும், முதலாவது சிலிண்டரும் இலவசமாக வழங்கப்படும். பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டவர்களின் நல்வாழ்வை மேம்படுத்துவதற்கும், இந்த உஜ்வாலா யோஜனா திட்டம் அறிவிக்கப்பட்டது.
அதேபோல, சமையல் சிலிண்டர் பயன்படுத்துவோருக்கு சிலிண்டர் நிறுவனத்திடமிருந்து ரூ.50 லட்சம் வரை விபத்துக் காப்பீடு வழங்கப்படுகிறது. அதாவது, சிலிண்டரில் கேஸ் லீக்கேஜ் மற்றும் சிலிண்டர் வெடிப்புகள் போன்றவை நடந்துவிட்டால், வாடிக்கையாளர்களுக்கு காப்பீடு கிடைக்கிறது. இதற்காக காப்பீடு தொகை எதையும் வாடிக்கையாளர்கள் செலுத்த தேவையில்லை. இலவசமாகவே காப்பீடு வழங்கப்படுகிறது. இந்த காப்பீடு தொகையை பெறுவதற்கு, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் ஐசிஐசிஐ லம்பார்டு போன்ற காப்பீட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தமும் செய்திருக்கின்றன.
அந்தவகையில், எல்பிஜி சிலிண்டர் விபத்து ஏற்பட்டால் வாடிக்கையாளர் ரூ.50 லட்சம் வரை காப்பீட்டு தொகையை பெறலாம். இந்த காப்பீடு விஷயத்தில், வாடிக்கையாளருக்கு என்ன உரிமைகள் உள்ளது? இதற்கு என்ன செய்ய வேண்டும்? என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
* சிலிண்டர் வழங்கும் முன்பு டீலர் அதை முறையாக பரிசோதிக்க வேண்டும்.
* வாடிக்கையாளரின் வீட்டில் எல்பிஜி சிலிண்டர் விபத்தால் சேதமடைந்தால் ரூ.2 லட்சம் வரை காப்பீடு கிடைக்கும்.
* விபத்து ஏற்பட்டால், ரூ.50 லட்சம் ரூபாய் வரை இழப்பீடு கிடைக்கும்.
* விபத்தில் காயமடைந்த ஒவ்வொருவருக்கும் ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும்.
* விபத்து நடந்து 30 நாட்களுக்குள் வாடிக்கையாளர் தனது எல்பிஜி நிறுவனம் மற்றும் அருகில் இருக்கும் காவல் நிலையத்திற்கு விபத்து குறித்து தெரிவிக்க வேண்டும்.
* சிலிண்டர் இன்சூரன்ஸ் வாங்க FIR காப்பி, மருத்துவமனை ரசீதுகள், இறப்பு ஏற்பட்டால் போஸ்ட் மார்டம் ரிப்போர்ட் ஆகிய ஆவணங்கள் கண்டிப்பாக சமர்ப்பிக்க வேண்டும்.
* கேஸ் நிறுவனங்களே காப்பீடு நிறுவனங்களைத் தொடர்பு கொண்டு தேவையானவற்றைச் செய்து கொடுக்கும்.
* சிலிண்டர் பைப், ஸ்டவ் மற்றும் ரெகுலேட்டர் போன்றவை அனைத்தும் ஐ.எஸ்.ஐ முத்திரை உள்ள நபர்களுக்கு மட்டுமே இழப்பீடு தொகை கிடைக்கும்.
* சிலிண்டர் யாருடைய பெயரில் உள்ளதோ அவருக்கு மட்டுமே காப்பீடு தொகை கிடைக்கும். இந்த நிபந்தனைகளை பூர்த்தி செய்துள்ள நபர்களுக்கு மட்டுமே ரூ.50 லட்சத்திற்கான காப்பீடு தொகை கிடைக்கும்.