தனியார் பள்ளிகளில் இலவச கல்வி..!! விண்ணப்பிப்பது எப்படி..? யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..?
இலவச கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் எல்.கே.ஜி., 1ஆம் வகுப்பில் சேர விண்ணப்பிப்பது எப்படி என்பது குறித்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் விளக்கம் அளித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டம் சிறுபான்மையற்ற அனைத்து தனியார் சுயநிதி பள்ளிகளில் நுழைவு நிலை வகுப்பில் 25% ஒதுக்கீட்டில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் சேர்க்கை செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் 2013-14ஆம் கல்வி ஆண்டு முதல் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த குழந்தைகள் சேர்க்கப்பட்டு வருகின்றனர். வரும் கல்வியாண்டில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சிறுபான்மையற்ற அனைத்து தனியார் சுயநிதி பள்ளிகளில் எல்.கே.ஜி. மற்றும் 1ஆம் வகுப்பில் 25% ஒதுக்கீட்டின் கீழ் மாணவர் சேர்க்கைக்கு இணைய வழியில் வரும் 22ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 20ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
இதற்கான வசதி rte.tnschools.gov.in என்ற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. விண்ணப்பம் வெற்றிகரமாக பதிவிறக்கம் செய்யப்பட்ட விவரம் பதிவு செய்யப்பட்ட பெற்றோரின் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பி வைக்கப்படும். முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்), மாவட்ட கல்வி அலுவலர், வட்டார கல்வி அலுவலர், ஒருங்கிணைந்த பள்ளி கல்வி வட்டார வள மையம் ஆகிய அலுவலகங்களில் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை எந்தவித கட்டணமும் இல்லாமல் பதிவேற்றம் செய்யலாம்.
இந்த திட்டத்தின் கீழ் எல்.கே.ஜி. வகுப்பிற்கு விண்ணப்பிக்கும் குழந்தைகள் 1-8-2020 முதல் 31-7-2021-க்குள்ளும், 1ஆம் வகுப்புக்கு விண்ணப்பிக்கும் குழந்தைகள் 1-8-2018 முதல் 31-7-2019-க்குள்ளும் பிறந்திருக்க வேண்டும். மாணவர்களின் புகைப்படம், மாணவர், பெற்றோரின் ஆதார் அட்டை நகல், இருப்பிட சான்று, வருமான சான்று, சாதி சான்று, முன்னுரிமை ஏதேனும் இருந்தால் அதற்கான சான்று ஆகியவற்றை பதிவேற்றம் செய்ய வேண்டும். மாவட்டத்தில் உள்ள அரசு இ-சேவை மையங்களில் பதிவேற்றம் செய்வதற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்த திட்டத்தின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட இடங்களை விட அதிகமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டிருந்தால் குலுக்கல் முறையில் அடுத்த மாதம் 28ஆம் தேதி அன்று அந்தந்த பள்ளிகளில் நடைபெறும். பெற்றோர் சேர்க்க விரும்பும் பள்ளிக்கு சென்று குலுக்கலில் கலந்து கொள்ளலாம். வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினரின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ள ஆதரவற்றவர், எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டவர், 3ஆம் பாலினத்தவர், துப்புரவு தொழிலாளரின் குழந்தை, மாற்றுத்திறனாளிகள் போன்றோரிடம் இருந்து பெறப்படும் தகுதியான விண்ணப்பங்களுக்கு குலுக்கல் நடத்துவதற்கு முன்பே சேர்க்கை வழங்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
Read More : JEE முதன்மை தேர்வுக்கான நுழைவு சீட்டு வெளியீடு..!! தேசிய தேர்வு முகமை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!