UPSC தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு...! யாரெல்லாம் இதற்கு விண்ணப்பிக்கலாம்...? முழு விவரம்
மீனவ சமுதாயத்தை சார்ந்த பட்டதாரி இளைஞர்களுக்கு இந்திய குடிமைப்பணி போட்டித்தேர்விற்கான இலவச பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாக சேலம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் கூறியதாவது; மீன்வளம், மீனவர் நலத்துறை மற்றும் சென்னை அண்ணா மேலாண்மை பயிற்சி நிலையம் (அகில இந்திய குடிமைப்பணிகளுக்கான பயிற்சி நிலையம்) இணைந்து ஆண்டு தோறும் 20 கடல் மற்றும் உள்நாட்டு மீனவ பட்டதாரி இளைஞர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு இந்திய குடிமைப்பணிக்கான போட்டித் தேர்வில் கலந்துக்கொள்ள ஏதுவாக பிரத்யேக பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
கடல் மற்றும் உள்நாட்டு மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மற்றும் மீனவர் நலவாரிய உறுப்பினர்களின் வாரிசு பட்டதாரி இளைஞர்கள் இப்பயிற்சி திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம். இத்திட்டத்தின் கீழ் பயிற்சி பெற விரும்புவோர் விண்ணப்ப படிவம் மற்றும் வழிகாட்டுதல்களை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் இணையதளமான www.fisheries.tn.gov.in-லிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது விண்ணப்ப படிவங்களை தருமபுரி மண்டல மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை துணை இயக்குநர் மற்றும் மேட்டூர் அணை, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகங்களில் அலுவலக வேலை நாட்களில் நேரில் விலையின்றி பெற்றுக்கொள்ளலாம்.
விண்ணப்பதரார் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் இணையத்தளத்தில் உள்ள விரிவான அரசு வழிகாட்டு நெறிமுறைகளின் படி விவரங்களை பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களுடன் மேட்டூர் அணை, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு பதிவு அஞ்சல் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ 05.11.2024 மாலை 5.00 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும், இத்திட்டம் குறித்த கூடுதல் விபரங்களுக்கு மீன்வள உதவி இயக்குநர் அலுவலகம், மேட்டூர் அணை பூங்கா, எதிரில், கொளத்தூர் சாலை, மேட்டூர் அணை- 636 401 என்ற மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரிலோ அல்லது 04298-244045 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.