ஆண்டுக்கு 4 இலவச கேஸ் சிலிண்டர் வழங்கப்படும்..! மத்திய அமைச்சர் அமித் ஷா அதிரடி அறிவிப்பு...!
தெலங்கானா மாநிலத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் ஆண்டுக்கு 4 இலவச கேஸ் சிலிண்டர், பட்ட படிப்பு படிக்கும் பெண்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
தெலங்கானா மாநிலத்தில் வரும் நவம்பர் மாதம் 30-ம் தேதி 119 தொகுதிகளுக்கு சட்டபேரவை தேர்தல் நடைபெற உள்ளது. தெலுங்கானா ராஷ்ரீய சமிதி, காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் மாநிலத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் என்னென்ன இலவச நலத்திட்ட பணிகள் செய்வோம் என்கின்ற வாக்குறுதிகளை மத்திய அமைச்சர் அமித்ஷா, தேசிய தலைவர் ஜே.பி நட்டா வெளியிட்டனர். ஆண்டுக்கு 4 இலவச கேஸ் சிலிண்டர், பட்ட படிப்பு படிக்கும் பெண்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்படும் என தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலுக்கு பாஜக வாக்குறுதியாக அறிவித்தது. விவசாயிகளுக்கு இலவசமாக நாட்டு மாடுகள், விதை நெல் வகைகள் வழங்கப்படும் எனவும் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கானா ராஷ்ரீய சமிதி சார்பில் வெளியிடப்பட்டுள்ள தேர்தல் வாக்குறுதிகளில் முக்கியமாக; வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள 93 லட்சம் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் மதிப்பிலான ஆயுள் காப்பீடு வழங்கப்படும். சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியம் ரூ.2016-இல் இருந்து படிப்படியாக உயர்த்தப்பட்டு ரூ.5 ஆயிரமாக உயர்த்தப்படும். ஆட்சிக்கு வந்த முதல் ஆண்டிலேயே ரூ.3016ஆக உயர்த்தப்படும். மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியம் ரூ.4016-லிருந்து ரூ.6016 ஆக உயர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல தகுதியானவர்களுக்கு 400 ரூபாய்க்கு சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கப்படும். ஆரோக்கிய ஸ்ரீ திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் மதிப்பிலான மருத்துவக் காப்பீடு செய்து கொடுக்கப்படும் என பல்வேறு வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.