கேரளா ரயில்வே விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு...! ரூ.1 லட்சம் அறிவிப்பு
கேரளா ரயில்வே விபத்தில் உயிரிழந்த நபர்களுக்கு ரூ. 1 லட்சம் கருணைத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கேரளாவின் பாலக்காடு மாவட்டம், ஷோரனூர் பகுதியில் தண்டவாளத்தை தூய்மைபடுத்தும் பணியில் ஒப்பந்த ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு பரதபுழா என்ற நதியின் மீது கட்டப்பட்டுள்ள ரயில்வே மேம்பாலத்தில் தமிழகத்தின் சேலத்தை சேர்ந்த ராணி, வள்ளி, லட்சுமணன், மற்றொரு லட்சுமணன் என 4 பேர் நேற்று மாலை தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது கேரளா எக்ஸ்பிரஸ் விரைவு ரயில் ரயில்வே மேம்பாலத்தின் மீது வந்தது. இதை 4 பேரும் கவனிக்கவில்லை. ரயில் நெருங்கி வந்ததை பார்த்ததும் 4 பேரும் மறுமுனையை நோக்கி ஓடினர். அதற்குள் விரைவு ரயில் அவர்கள் மீது மோதியது. இதில் 4 பேரும் உயிரிழந்தனர். அவர்களது உடல்கள் பரதபுழா நதியில் விழுந்தன. சம்பவத்தில் உயிரிழந்த ராணி, வள்ளி, லட்சுமணன் ஆகியோரின் உடல்கள் உடனடியாக மீட்கப்பட்டன. மற்றொரு லட்சுமணனின் உடல் நதியில் அடித்துச் செல்லப்பட்டது. அவரது உடலை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
தொழிலாளர்களை பணியில் அமர்த்திய நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்வதற்கான நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது மற்றும் உள்வரும் ரயில்களில் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யத் தவறியதற்காக ஒப்பந்ததாரர் மீது கிரிமினல் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது, உயிரிழந்த நபர்களுக்கு ரூ. 1 லட்சம் கருணைத் தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இறந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு விரைவில் நிவாரணம் வழங்கப்படும் என ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.