முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் காலமானார்..!
முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கிற்கு இன்று மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில், அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 92 வயதான முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் கடந்த சில காலங்களாக உடல் நிலை பிரச்சினைகளை எதிர்கொண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் மன்மோகன் சிங் இன்று காலமானார்.
தற்போது பாகிஸ்தானின் ஒரு பகுதியாக உள்ள கா, பஞ்சாப்பில் 1932 அன்று சீக்கிய குடும்பத்தில் மன்மோகன் சிங் பிறந்தார். பிரிவினைக்குப் பிறகு, அவரது குடும்பம் இந்தியாவில் குடிப்பெயர்ந்தனர். இவர் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். மேலும் மத்திய ரிசர்வ் வங்கியின் தலைவராகவும் பதவி வகித்துள்ளார். முதல் முதலாக 1991ம் ஆண்டு, எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்ட மன்மோகன் சிங், 1998 முதல் 2004 வரை எதிர்க்கட்சித் தலைவராக பணியாற்றினார்.
டாக்டர் மன்மோகன் சிங் 1991-96 ஆம் ஆண்டில் PV நரசிம்மராவ் தலைமையிலான அரசாங்கத்தில் நிதி அமைச்சராக பணியாற்றினார். அப்போது அவர் இந்தியாவில் பெரிய அளவில் பொருளாதார கொள்கை மாற்றங்களை ஏற்படுத்தினார். மன்மோகன் சிங் நிதி அமைச்சராக இருந்த காலகட்டத்தில் தான் இந்தியாவில் புதிய பொருளாதார கொள்கை முதன் முதலாக அமல்படுத்தப்பட்டது.
மேலும் 2004 முதல் 2014 வரை காங்கிரஸ் ஆட்சியில் இரண்டு முறை இந்தியாவின் பிரதமராக பதவி வகித்துள்ளார். மக்களவை மூலம் தேர்ந்தெடுக்கப்படாத ஒரே பிரதமர் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
டாக்டர் மன்மோகன் சிங் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ராஜ்யசபாவில் இருந்து ஓய்வு பெற்றார். அப்போது தற்போதைய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, மன்மோகன் சிங்கின் பங்களிப்புகளை பாராட்டி, நவீன இந்தியாவின் பொருளாதார நிலப்பரப்பை வடிவமைப்பதில் அவரது முக்கிய பங்கை கோடிட்டுக் காட்டினார். மன்மோகன் சிங் பாராளுமன்றத்தில் கடைசியாக பேசிய வார்த்தைகள் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிரான கடுமையான விமர்சனமாக இருந்தது, அதை "அனுமதிக்கப்பட்ட மற்றும் சட்டபூர்வமான ரெய்டு" என்று விவரித்தார்.
பத்து ஆண்டுகளாக பிரதமராக இருந்த மன்மோகன் சிங்கின் மறைவிற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மன்மோகன் சிங் மறைவை அடுத்து டெல்லியில் பலத்த பாதுகாப்பபு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.