போக்சோ வழக்கில் இன்று கைதாகிறாரா முன்னாள் முதல்வர் எடியூரப்பா..!
போக்சோ வழக்கில் கர்நாடக முன்னாள் முதல்வர் பிஎஸ் எடியூரப்பாவுக்கு எதிராக 1வது விரைவு நீதிமன்றம் ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட் (NBW) பிறப்பித்துள்ளது. இதனால், இந்த வழக்கில் 81 வயதான முன்னாள் முதல்வர் பிஎஸ் எடியூரப்பா இன்று கைது செய்யப்பட வாய்ப்புள்ளது.
பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டத்தின் (போக்சோ) சட்டத்தின் கீழ் கர்நாடகா முன்னாள் முதல்வர் பிஎஸ் எடியூரப்பாவுக்கு குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) நோட்டீஸ் அனுப்பியுள்ளது. புதன்கிழமை விசாரணைக்கு ஆஜராகுமாறு எடியூரப்பாவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. இருப்பினும், டெல்லியில் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட கட்சிக் கூட்டம் காரணமாக, அவரால் பங்கேற்க முடியவில்லை.
மேலும் ஜூன் 17 ஆம் தேதி திங்கட்கிழமை சிஐடியின் விசாரணையில் கலந்துகொள்வதாக கடிதம் ஒன்றை வெளியிட்டார். இந்நிலையில் பாலியல் குற்றங்களில் இருந்து சிறாரை பாதுகாக்கும் போக்சோ சட்டத்தின் கீழ் விசாரணைக்கு ஆஜராகத் தவறிய பாஜக தலைவர் பி.எஸ்.எடியூரப்பாவுக்கு எதிராக பெங்களூரு நீதிமன்றம் ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
வழக்கு விவரம்: பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மைனர் பெண் ஒருவர், தனது உறவினர்களுடன் சட்ட உதவி கோரி முன்னாள் முதல்வர் பிஎஸ் எடியூரப்பாவின் வீட்டுக்குச் சென்றார். அப்போது அந்த சிறுமியை அறைக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து, முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது.
மாநில அரசு விசாரணையை சிஐடியிடம் ஒப்படைத்தது. எடியூரப்பா பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்பட்டு அவர் மீது போக்சோ வழக்குப் தொடர்ந்த 17 வயது சிறுமியின் தாயாரான 54 வயது பெண் கடந்த மே மாதம் 26ஆம் தேதி திடீரென்று நுரையீரல் புற்றுநோயால் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.