For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

கனடா பள்ளிகளிலும் உணவுத் திட்டம் அறிமுகம்..!! திமுக பெருமிதம்..!!

07:36 AM Apr 03, 2024 IST | Chella
கனடா பள்ளிகளிலும் உணவுத் திட்டம் அறிமுகம்     திமுக பெருமிதம்
Advertisement

தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டுள்ள காலை உணவுத் திட்டம் இந்தியாவில் உள்ள மாநிலங்கள் மட்டுமின்றி, வெளிநாடுகளிலும் (கனடாவிலும்) நடைமுறைப்படுத்தப்படுவது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தொலைநோக்குப் பார்வைக்குக் கிடைத்துள்ள மிகப்பெரிய வெற்றி என திமுக கூறியுள்ளது.

Advertisement

இதுதொடர்பாக திமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ”தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கனவுத் திட்டமாக தமிழ்நாடு அரசு தொடக்கப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் வெகுசிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் 7.5.2022 அன்று, "அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இனி காலை சிற்றுண்டி வழங்கப்படும். நகரப் பகுதிகளிலும், கிராமப் பகுதிகளிலும், பள்ளிக்குச் செல்லக் கூடிய குழந்தைகள் காலையிலேயே புறப்பட்டு விடுகிறார்கள்.

இதனால் பெரும்பாலான குழந்தைகள் காலை உணவு சாப்பிடுவது இல்லை என்ற தகவல் அரசுக்குக் கிடைத்திருக்கிறது என்றும், ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலக்கூடிய தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு அனைத்துப் பள்ளி நாட்களிலும் காலை வேளையில் சத்தான சிற்றுண்டி வழங்கப்படும் என்றும் இதனை உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக வழங்குவோம்” என்றும் அறிவித்தார்.
இந்த அறிவிப்பினைச் செயல்படுத்தும் விதத்தில் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளான 15.9.2022 அன்று முதலமைச்சர், இத்திட்டத்தினை மதுரையில் தொடங்கி வைத்தார்கள்.

மேலும், 25.8.2023 அன்று முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்த திருக்குவளை கிராமத்தில் உள்ள தொடக்கப் பள்ளியில் குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கி, காலை உணவுத் திட்டத்தினை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தினார். அதன் மூலம் 31,000 அரசுப் பள்ளிகளில் 17 லட்சம் குழந்தைகள் நாள்தோறும் காலை உணவு உண்டு வகுப்பறைகளில் சிறப்பாகக் கல்வி பயின்று வருகின்றனர். இத்திட்டத்தின் சிறப்புகளை, தெலங்கானா மாநில அரசு அறிந்து அதன் அலுவலர்கள் தமிழ்நாட்டிற்கு வருகை புரிந்து நேரில் பார்வையிட்டு தமிழ்நாடு இத்திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்துகிறது. தெலங்கானா மாநிலத்திலும் இந்தக் காலை உணவு திட்டத்தை நடைமுறைப்படுத்துவோம் என்று கூறிச் சென்றனர். அவ்வாறே, தெலங்கானா மாநிலத்தில் தற்போது காலை உணவுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

இந்தக் காலை உணவுத் திட்டம் இந்தியா முழுவதும் புகழடைந்து வரும் நிலையில், இந்தியாவைக் கடந்து வெளிநாடுகளிலும் காலை உணவுத் திட்டம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. கனடா நாட்டில் அதன் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது எக்ஸ் வலைதளப்பக்கத்தில், "கனடா நாட்டில் பள்ளிக் குழந்தைகளுக்குத் தேசிய உணவுத் திட்டத்தினை அறிமுகம் செய்து வைக்கப்போகிறோம்" எனப் பதிவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டுள்ள காலை உணவுத் திட்டம் இந்தியாவில் உள்ள மாநிலங்களில் மட்டுமல்லாமல், வெளிநாடுகளிலும் நடைமுறைப்படுத்தப்படுவது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தொலைநோக்குப் பார்வைக்குக் கிடைத்துள்ள மிகப்பெரிய வெற்றியாகும்" இவ்வாறு திமுகவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More : ஏப்.8ஆம் தேதியை எதிர்பார்த்து காத்திருக்கும் மில்லியன் கணக்கான மக்கள்..!! பள்ளிகளுக்கும் விடுமுறை..!! என்ன நடக்கிறது..?

Advertisement