Food | புகாரளித்த 48 மணி நேரத்திற்குள் ஆக்ஷன்..!! புதிய செயலியை உருவாக்கிய தமிழ்நாடு அரசு..!! ஓட்டல் உரிமையாளர்களே உஷார்..!!
உணவு தொடர்பான புகார்கள் இருந்தால், அதனை பொதுமக்கள் எப்படி அளிக்க வேண்டும்? யாரிடம் புகார் அளிக்க வேண்டும் என்பது குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
பொதுமக்கள் வெளியூர்களுக்கு செல்லும்போதோ அல்லது பிற இடங்களுக்கு செல்லும்போதோ ஓட்டல்களில் சாப்பிட நேரிடுகிறது. அதேபோல, வெளியூர்களில் தங்கி வேலை பார்க்கும் எத்தனையோ பேச்சுலர்களுக்கு, ஓட்டல்கள்தான் பசியாற்றி வருகின்றன. ஆனால், சில ஹோட்டல்களில் உணவு சுகாதாரம் சரியாக பேணப்படுவதில்லை. இதுகுறித்த புகார்களையும் வாடிக்கையாளர்கள் அவ்வப்போது தெரிவித்து வரும் நிலையில், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளும் நேரடியாக சென்று சம்பந்தப்பட்ட ஓட்டல்களில் சோதனை நடத்துகின்றனர்.
சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிக்கப்படுமானால், சம்பந்தப்பட்ட ஓட்டல்கள் மீது நடவடிக்கையோ அல்லது அபராதமோ விதிக்கின்றனர். இனி இப்படி புகார் வரக்கூடாது என்று ஓட்டல் நிர்வாகத்தினரை எச்சரிக்கின்றனர். எனினும், ஓட்டல்களில் சுகாதாரமற்ற உணவு அல்லது தரமற்ற உணவு குறித்து யாரிடம், எப்படி புகார் தருவது என்ற சந்தேகம் பொதுமக்கள் மத்தியில் நிலவுகிறது. இதற்குதான் தமிழ்நாடு அரசு புதிய செயலியை சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது.
உணவின் தரம் குறித்து பொதுமக்கள் புகார் அளிக்க ஏதுவாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை ‘வாட்ஸ் அப்’ எண் வெளியிட்டுள்ளது. உணவின் தரம் குறித்த புகார்களை நுகர்வோர் உணவு பாதுகாப்பு செல்போன் ஆப் மூலமாகவும், 94440 42322 என்னும் ‘வாட்ஸ் அப்’ எண் வாயிலாகவும் பதிவு செய்யலாம்” என்று தெரிவித்துள்ளது. இத்தனை காலமும், ஓட்டல், ரெஸ்டாரண்ட்டுகள், பேக்கரி, ரோட்டோர கடைகளில் உணவின் தரம் குறைவாக இருந்தாலோ, சுகாதாரமற்று வழங்கினாலோ நுகர்வோர் வாட்ஸ்ஆப் மூலம் புகார் தெரிவித்து வந்தனர். இந்த புகாருக்கு அதிகபட்சமாக ஒருவாரத்திற்குள் தீர்வு காணப்பட்டது.
ஆனால், தற்போது foodsafety.tn.gov.in என்ற இணைய தளம் மூலமாகவும், Tn food safety Consumer App என்ற செயலியை டவுன்லோடு செய்து கொள்வதன் மூலமாகவும் புகார் தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படியே புகார் தெரிவித்தாலும், எழுத்துப்பூர்வமாக புகாரை அனுப்ப தேவையில்லை. தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் விவரங்களை தேர்ந்தெடுத்து சொல்லும் வசதி உருவாக்கப்பட்டுள்ளது. புகார்தாரர் விவரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும். புகார் அளித்த 24 மணி நேர முதல் 48 மணி நேரத்திற்குள் ஆய்வு நடவடிக்கை உடனடியாக எடுக்கப்பட்டு புகார்தாரருக்கு ஆய்வறிக்கை அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.