ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு..!! நீர்வரத்து 61,000 கனஅடியாக அதிகரிப்பு..!! 5-வது நாளாக தொடரும் தடை..!!
கர்நாடக அணைகளில் நீர் திறக்கப்பட்டு வருவதால், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நீர்வரத்து தற்போது 61,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் 5-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் குடகு, மண்டியா உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் கபினி, கே.எஸ்.ஆர். அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி தமிழ்நாட்டிற்கு 80,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், இன்று காலை தமிழக – கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு வினாடிக்கு 61,000 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
அதிக நீர்வரத்து காரணமாக ஒகேனக்கல் வரும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி 5-வது நாளாக பரிசில் சவாரி செய்வதற்கும், அருவிகளில் குளிக்கவும் தடை நீட்டிக்கப்பட்டு வருகிறது. மேலும், ஒகேனக்கல் மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதை முற்றிலும் தண்ணீரால் மூழ்கியுள்ளது.