தொடர் கனமழை... நீர் நிலைகளில் வெள்ள அபாயம்...! பொதுமக்கள் இதை எல்லாம் செய்ய கூடாது...!
கோவை மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளில் வெள்ள அபாயம் உள்ளதால் பொதுமக்கள் நீர்நிலைகளுக்கு குளிக்கவோ, செல்ஃபி எடுக்கவோ செல்ல வேண்டாம் என ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கோவை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதனை தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பழுதடைந்த கூரை வீடுகள், மண் சுவர் வீடுகள், சிதிலமடைந்த கட்டிடங்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் கோவை மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளில் வெள்ள அபாயம் உள்ளதால் பொதுமக்கள் நீர்நிலைகளுக்கு குளிக்கவோ, செல்ஃபி எடுக்கவோ செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் பேரிடர் மேலாண்மை அலுவலக கட்டுப்பாட்டு அறையில் வருவாய்த் துறை, ஊரக வளர்ச்சித் துறை. காவல்துறை, தீயணைப்புத்துறை, நகராட்சி துறை மற்றும் பேரூராட்சிகள், சார்ந்த அலுவலர்களுடன் 24×7 மணி நேரமும் இயங்கும் வகையில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு இயங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.