தமிழகத்திற்கு வரும் 27ம் தேதிக்குள் வெள்ள நிவாரண நிதி!… அமித் ஷா உறுதி!
சென்னை மற்றும் தென் மாவட்டங்களின் வெள்ள பாதிப்புகள் குறித்ததான நிவாரண நிதி வரும் 27ம் தேதிக்குள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அமைச்சர் அமித்ஷா உறுதி அளித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த டிசம்பர் 3 மற்றும் 4ம் தேதிகளில் மிக்ஜாம் புயலினால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பெருமழை ஏற்பட்டு, அதன் காரணமாக கடுமையான பாதிப்புகளும், பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிப்படைந்தது. இதைத்தொடர்ந்து டிசம்பர் 17 மற்றும் 18ம் தேதிகளில் ஏற்பட்ட வரலாறு காணாத அதிக மழைப்பொழிவின் காரணமாக, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மிக கடுமையான வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டன. வரலாறு காணாத இந்த கனமழையின் காரணமாக தென் மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதையடுத்து மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தமிழ்நாடு அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர். இதையடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கும் அரசு சார்பில் ரூ.6000 நிவாரணமாக அறிவிக்கப்பட்டதோடு, உடனடியாக வழங்கப்பட்டது.
மேலும் மழை வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு குடிநீர், மின்சாரம், சாலை பராமரிப்பு, தேவையான நிவாரண பொருட்கள் ஆகிய அனைத்தையும் தமிழ்நாடு அரசு உடனடியாக வழங்கியது. இதையடுத்து வெள்ள பாதிப்புகளை மத்திய குழுவும் நேரில் வந்து பார்வையிட்டு சென்றது. இதுபோன்ற சூழலில் கடந்த மாதம் 19ம் தேதி டெல்லி சென்ற தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ள பாதிப்பு நிவாரண நிதியை உடனடியாக வழங்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த நிலையில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் எட்டு பேர் கொண்ட அனைத்துக் கட்சியின் எம்பிக்கள் குழு நேற்று பிற்பகல் 3.30 மணி அளவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவரது இல்லத்தில் சந்தித்தனர். தேசிய பேரிடர் நிதியில் இருந்து தமிழ்நாடு வெள்ள பாதிப்புக்கு, அதாவது மிக்ஜாம் புயல் பாதிப்புக்கு தற்காலிக நிதியாக ரூ.7033.45கோடியும் அதேப்போன்று நிரந்தர நிதியாக ரூ.12,659.24 கோடியும், இதேப்போன்று தென் மாவட்டத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய பாதிப்பை கருத்தில் கொண்டு தற்காலிக நிதியாக ரூ.8,612.14கோடியும், நிரந்தர நிதியாக ரூ.9,602.14கோடியும், மொத்தமாக ரூ.37,907.21 கோடி வெள்ள பாதிப்பு நிவாரண நிதியை தமிழ்நாட்டுக்கு உடனே வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்து வலியுறுத்தினோம் என்று தமிழக அனைத்துக்கட்சி எம்பிக்கள் குழு பேட்டியளித்திருந்தனர்.
மேலும், தமிழ்நாட்டின் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய குழு அங்கு சென்றுள்ளது. அவர்கள் ஆய்வை முடித்து விட்டு வரும் 21ம் தேதி மீண்டும் டெல்லி திரும்ப உள்ளார்கள். இதனைத்தொடர்ந்து மத்திய உள்துறை, நிதித்துறை, விவசாயத்துறை ஆகிய மூன்று துறைகளும் குழு தாக்கல் செய்யும் அறிக்கையை அடிப்படையாக வைத்து கலந்து ஆலோசித்து ஜனவரி 27ம் தேதிக்குள் போதுமான நிதியை தமிழ்நாட்டுக்கு வழங்க உரிய நடவடிக்கை எடுக்கிறோம்’’ என உள்துறை அமைச்சர் அமித்ஷாஉறுதியளித்துள்ளார் என்று தமிழ்நாடு எம்பிக்கள் குழுவினர் தெரிவித்தனர்