முக்கிய அறிவிப்பு...! வெள்ள நிவாரண நிதி... அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசு விதித்த நிபந்தனைகள்...!
வெள்ள நிவாரண பணிகளுக்காக, அரசு அலுவலர்கள், பணியாளர்கள், ஆசிரியர்கள், தங்களின் ஊதியத்தை அளிக்க எழுத்துபூர்வமாக விருப்பம் தெரிவிக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக ஏற்பட்ட வரலாறு காணாத பெருமழையால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பலத்த சேதங்கள் ஏற்பட்டன. இந்த இயற்கைப் பேரிடரால் ஏறத்தாழ ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தப் பேரிடர் பாதிப்பிலிருந்து மக்களை மீட்டெடுப்பதற்கு தங்களின் பங்களிப்பாக தமிழக முதல்வரும், அமைச்சர்களும், திமுகவின் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், தங்கள் ஒரு மாத ஊதியத்தை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கி உள்ளனர்.
அரசு அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஒரு நாள் ஊதியத்தை, முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்க, பல்வேறு பணியாளர் சங்கங்கள் விருப்பம் தெரிவித்துள்ளார். அதை அரசு ஏற்று, டிசம்பர் அல்லது ஜனவரி மாத ஊதியத்தில் பிடித்தம் செய்ய அனுமதி அளித்துள்ளது. தங்களின் ஒரு நாள் அல்லது அதற்கு மேற்பட்ட நாட்களுக்கான ஊதியத்தை வழங்க விரும்பும் அலுவலர்கள், பணியாளர்கள், ஆசிரியர்கள், தங்கள் விருப்பத்தை, சம்பந்தப்பட்ட அலுவலரிடம் எழுத்துபூர்வமாக அளிக்க வேண்டும்.
மேலும் பிடித்தம் மேற்கொள்ளப்படும் மாதத்தின் மொத்த ஊதியத்தை அடிப்படையாக வைத்து, ஒரு நாள் ஊதியம் கணக்கிடப்பட வேண்டும். பணியாளர்களிடம் இருந்து பிடித்தம் செய்யப்பட்ட தொகை, முதல்வரின் பொது நிவாரண நிதிக்கான வங்கி சேமிப்பு கணக்கில், மின்னணு முறை வழியாக, ஊதிய நாளன்று நேரடியாக செலுத்தப்பட வேண்டும். உள்ளாட்சி அமைப்புகள், பல்கலைகள், அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள், அரசு மானியம் பெறும் நிறுவன பணியாளர்களுக்கும், தொகுப்பூதிய பணியாளர்களுக்கும் இது பொருந்தும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.