வெள்ள அபாய எச்சரிக்கை!… செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு அதிகரிப்பு!
நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து ஆயிரம் கன அடியாக நீர்திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதன் காரணமாக பல இடங்களில் மழைநீரானது தேங்கியுள்ளது. தமிழகத்தில் பல்வேறு குளங்கள் ஏரி நிலைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இந்த சூழ்நிலையில் வங்க கடலில் புதிய புயல் சின்னம் உருவாகியுள்ளது. இது தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலாமக உருவாகி உள்ளது. வருகிற 2 ஆம் தேதி புயலாக உருவெடுத்து கரையை கடக்க உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் மீண்டும கன மழை பெய்து வருகிறது. இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக நீர் பிடிப்பு பகுதியில் இருந்து தண்ணீர் திறக்கப்படுகிறது.
24 அடி உயரம் கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 22.35 அடியாக உயர்ந்துள்ளது. 3,645 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் தற்போது நீர் இருப்பு 3,210 மில்லியன் கன அடியாக உள்ளது. மழை தொடர்வதாலும், அடுத்த வரும் நாட்களிலும் மழைப்பொழிவு அதிகரிக்கும் என்பதால் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏரியில் இருந்து நீர்திறப்பு 200 கன அடியில் இருந்து ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு. அதனால், அடையாற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் செம்பரம்பாக்கம் ஏரியில் கூடுதல் நீர் திறக்கப்படுவதை நினைத்து அச்சமடைய வேண்டாம் என்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர். முழுக்க முழுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மட்டுமே செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து கூடுதல் நீர் திறக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.