5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!… முழுக்கொள்ளளவை எட்டியதால் வைகை அணையில் நீர் திறப்பு!
வைகை அணை முழு கொள்ளளவை எட்டியதையடுத்து 3,600 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே 71 அடி உயர வைகை அணை உள்ளது. மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால் அணை முழுக்கொள்ளளவை எட்டியதையடுத்து, கடந்த மாதம் 23ம் தேதியில் இருந்து கடந்த 8ம் தேதி வரை ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை ஆகிய மாவட்டங்களின் தண்ணீர் தேவைக்காக 3 கட்டங்களாக தண்ணீர் திறக்கப்பட்டது. இதற்கிடையே கடந்த வாரம் பெய்த பலத்த மழையால் நீர்வரத்து அதிகரித்தால், வைகை அணையின் நீர்மட்டம் 65 அடியாக உயர்ந்தது.
இதனையடுத்து ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை மாவட்டங்களின் கண்மாய் பாசனத்திற்காக அணையில் இருந்து மீண்டும் தண்ணீர் திறக்க அரசு உத்தரவிட்டது. இதன்படி முதற்கட்டமாக சிவகங்கை மாவட்ட கண்மாய் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. அடுத்த கட்டமாக நேற்று காலை முதல் ராமநாதபுரம் மாவட்ட கண்மாய் பாசனத்திற்காக வைகை அணையில் இருந்து வினாடிக்கு 3,600 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.