"5 நிமிடம் கங்கையில் மூழ்கி எழுந்தா புற்றுநோய்.."! மூடநம்பிக்கையால் பலியான 5 வயது சிறுவனின் உயிர்.!! கதறி அழுத பெற்றோர்.!
ரத்த புற்று நோயால் பாதிக்கப்பட்ட குழந்தை கங்கை ஆற்றில் மூழ்கடிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தியாவின் புனித ஸ்தலங்களில் ஒன்று ஹரித்வார் நகரம். இங்குள்ள ஹர் கி பவுரி நகரில் அமைந்திருக்கும் கங்கை நதி பிரசித்தி பெற்றதாகும். இந்த நதியில் நீராடினால் எல்லாவிதமான பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை மக்களிடம் நிலவி வருகிறது. இந்நிலையில் டெல்லியைச் சேர்ந்த பெற்றோர் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஐந்து வயது சிறுவனுடன் ஹரித்வார் நகருக்கு புதன்கிழமை வருகை புரிந்துள்ளனர்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தங்களது மகன் கங்கையில் நீராடினால் அவனுக்கு அதிசய நிவாரணம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஹர் கி பவுரி நகரில் அமைந்துள்ள கங்கையில் சிறுவனை மூழ்கச் செய்துள்ளனர். சிறுவனின் பெற்றோர்கள் கங்கை கரையில் அமர்ந்து மந்திரங்களை உச்சரிக்க உறவினர் ஒருவர் சிறுவனை கங்கை நீரில் மூழ்கடிக்க செய்துள்ளார். அப்போது மூச்சு திணறல் காரணமாக சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.
இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் காவல்துறையிடம் புகார் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக சிறுவனின் பெற்றோர் மற்றும் உறவினரை கைது செய்த காவல்துறை விசாரித்து வருகிறது.