காதல் திருமணம் செய்த இளம் ஜோடி வெட்டி படுகொலை.! தந்தை உட்பட 5 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது.!
தூத்துக்குடி மாவட்டத்தில் காதல் திருமணம் செய்து கொண்ட இளம் தம்பதியை வெட்டி படுகொலை செய்த வழக்கில் மணப்பெண்ணின் தந்தை உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரின் மீதும் குண்டா சட்டம் பாய்ந்திருக்கிறது.
தூத்துக்குடி மாவட்டம் முருகேசன் நகர் பகுதியில் சேர்ந்த மாரிச்செல்வம் மற்றும் கார்த்திகா ஆகிய இருவரும் காதல் திருமணம் செய்தனர். இந்நிலையில் புது மண தம்பதிகள் இருவரும் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக மணப்பெண்ணின் தந்தை மற்றும் சகோதரர் உட்பட ஐந்து பேர் காவல்துறையால் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஐந்து பேர் வீதம் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட கண்காணிப்பாளருக்கு கோரிக்கை மனு அனுப்பியிருந்தார் சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் சண்முகம். இந்தக் கோரிக்கை மனுவை விசாரணை செய்த காவல்துறை கண்காணிப்பாளர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்குமாறு கலெக்டருக்கு கோரிக்கை விடுத்தார் .
இவர்களது கோரிக்கையை ஏற்றுக் கொண்ட தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கைது செய்யப்பட்ட ஐந்து பேர் மீதும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து மணப்பெண்ணின் தந்தை சண்முகம் மற்றும் அவரது மகன் முத்துராமலிங்கம் உட்பட இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட ஐந்து பேர் மீதும் குண்டல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதுவரை இந்த வருடத்தில் 169 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாவட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.