மாணவர்கள் கவனத்திற்கு...! முதல் கட்ட மருத்துவ கலந்தாய்வு இன்று தொடக்கம்...!
முதல்கட்ட மருத்துவ கலந்தாய்வு இன்று முதல் தொடங்க உள்ளது.
தமிழகத்தில் 36 அரசு மருத்துவ கல்லூரிகள், சென்னை கே.கே.நகர் இஎஸ்ஐ மருத்துவ கல்லூரி, 22 தனியார் மருத்துவ கல்லூரிகள், 3 அரசு பல் மருத்துவ கல்லூரிகள், 20 தனியார் பல் மருத்துவ கல்லூரிகள் உள்ளன. இதில், அரசு கல்லூரிகளில் மொத்தம் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களில் 15 சதவீதம், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுகிறது.
அரசு கல்லூரிகளில் எஞ்சிய 85 சதவீத இடங்கள், தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் என மொத்தம் 6,630 எம்பிபிஎஸ் இடங்கள், 1,683 பிடிஎஸ் இடங்கள் மாநில அரசுக்கு உள்ளன. இதில், 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 496 எம்பிபிஎஸ் இடங்கள், 126 பிடிஎஸ் இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. இதுதவிர, தனியார் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 1,719 எம்பிபிஎஸ் இடங்கள், 430 பிடிஎஸ் இடங்கள் உள்ளன.
இன்று முதல் கலந்தாய்வு
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான பொது கலந்தாய்வு https://tnmedical selection.net என்ற சுகாதாரத் துறை இணையதளத்தில் இன்று தொடங்க உள்ளது. அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீடு பிரிவில் தரவரிசை பட்டியலில் உள்ளவர்கள் இன்று காலை 10 மணி முதல் 27-ம் தேதி மாலை 5 மணி வரை ஆன்லைனில் பதிவு செய்து, கட்டணம் செலுத்தி, இடங்களை தேர்வு செய்யலாம்.
மேலும் 28-ம் தேதி தரவரிசை பட்டியல் அடிப்படையில் கல்லூரிகளில் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும். தற்காலிக ஒதுக்கீடு விவரங்கள் 29-ம் தேதியும், இறுதி ஒதுக்கீடு விவரங்கள் 30-ம் தேதியும் இணையதளத்தில் வெளியிடப்படும். ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 5-ம் தேதி நண்பகல் 12 மணி வரை இடங்கள் ஒதுக்கீட்டு ஆணையை இணையதளத்தில் இருந்து பதி விறக்கம் செய்துகொள்ளலாம். ஒதுக்கீடு பெற்ற கல்லூரிகளில் செப்டம்பர் 5-ம் தேதி மாலை 5 மணிக்குள் சேர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.