ECI: முதல் கட்டம் 66.14%, இரண்டாம் கட்டம் 66.71% வாக்குப்பதிவு: இறுதி வாக்காளர் எண்ணிக்கையை வெளியிட்டது இந்திய தேர்தல் ஆணையம்..!
ECI: 2024 ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் முதல் இரண்டு கட்ட வாக்குப்பதிவுகள் நடைபெற்று முடிந்திருக்கிறது. முன்னதாக தமிழகம் மற்றும் பாண்டிச்சேரி உட்பட 102 பாராளுமன்ற தொகுதிகளுக்கு ஏப்ரல் 19ஆம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து கேரளா மற்றும் கர்நாடகா உட்பட 88 பாராளுமன்ற தொகுதிகளுக்கு இரண்டாம் கட்டமாக வாக்குப்பதிவு ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற்றது. முதல் இரண்டு கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், இன்னும் 5 கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து ஜூன் 4ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது.
இந்நிலையியல், ஏப்ரல் 19 மற்றும் 26 ஆம் தேதிகளில் ஏற்கனவே முடிவடைந்த மக்களவைத் தேர்தல் 2024 இன் முதல் மற்றும் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவின் இறுதி வாக்காளர் எண்ணிக்கையை இந்தியத் தேர்தல் ஆணையம் (ECI) தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி, முதல் கட்ட வாக்குப்பதிவில் 66.14 சதவீத வாக்குகளும், இரண்டாம் கட்ட வாக்குபதிவில் 66.71 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.
தேர்தல் ஆணையத்தின் கூற்றுப்படி, முதல் இரண்டு கட்டங்களுக்கான பாலின வாரியான வாக்காளர்களின் எண்ணிக்கை:
முதல் கட்டம்: ஆண்களின் வாக்குப்பதிவு - 66.22%, பெண்களின் வாக்குப்பதிவு - 66.07%, மூன்றாம் பாலினத்தவர் - 31.32%, ஒட்டுமொத்த வாக்குப்பதிவு 66.14%.
இரண்டாம் கட்டம்: ஆண்களின் வாக்குப்பதிவு - 66.99%, பெண்களின் வாக்குப்பதிவு - 66.42%, மூன்றாம் பாலினத்தவர் - 23.86%, ஒட்டுமொத்த வாக்குப்பதிவு - 66.71%.
ஏப்ரல் 19 அன்று முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்ற -21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அதிகபட்சமாக லட்சத்தீவில் -84.1 சதவீதம் வாக்குகளும், குறைந்த பட்சமாக பீகார் மாநிலத்தில் 49.26 சதவீதம் வாக்குகளும் பதிவாகியுள்ளது.
இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில், அதிகபட்சமாக மணிப்பூரில் 84.85 சதவீத வாக்குகளும், குறைந்த பட்சமாக உத்தரப் பிரதேசத்தில் 55.19 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.