2024ஆம் ஆண்டின் முதல் அமாவாசை..!! இவ்வளவு நன்மைகளா..? இப்படி செய்து பாருங்க..!!
மார்கழி மாதம் என்பது சிவ மற்றும் விஷ்ணு வழிபாட்டிற்குரிய மாதமாகும். இந்த மாதத்தில் வரும் அனைத்து தினங்கள், திதிகள் ஆன்மீக முக்கியத்துவம் கொண்டவையாகும். மேலும், பௌர்ணமி மற்றும் அமாவாசை தினங்களும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அந்த வகையில், 2024ஆம் ஆண்டின் மார்கழி மாத அமாவாசை எப்போது? அதன் சிறப்பு என்ன? என்பதை தற்போது பார்க்கலாம்.
மார்கழி மாதத்தில் வரும் அமாவாசை தினம் முக்கிய திதி தினமாகும். இம்மாதத்தில் வரும் அமாவாசையில் முன்னோர்கள் வழிபாட்டை மேற்கொள்வது மிகவும் நல்லது. குறிப்பாக எதிர்பாரா விதத்தில் மரணித்த முன்னோர்கள் அல்லது உறவினர்களுக்கு திதி தர்ப்பணம் போன்றவற்றை தருவதாலும் அல்லது அவர்களை வழிபடுவதலும் அவர்களுக்கு பெருமாளின் வைகுண்ட வாசம் பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
மார்கழி அமாவாசை தினத்தன்று காலையில் குளித்து முடித்து, ஆற்றங்கரை அல்லது குளக்கரையில் மறைந்த உங்கள் முன்னோர்கள், உறவினர்களுக்கு திதி தர்ப்பணம் தரலாம். இப்படி தர்ப்பணம் தர முடியாதவர்கள் அன்றைய தினம் உங்கள் வீட்டிலேயே முன்னோர்களை வழிபட்டு எள் கலந்த சாதத்தை காகங்களுக்கு தரலாம். மேலும் யாசகர்களுக்கு அன்னதானம் செய்யலாம். இந்த தினத்தில் ராமேஸ்வரம், காவேரி, கங்கை போன்ற புனித கடல், ஆறுகளில் தலைமுழுகி முன்னோர்களை வழிபடலாம். இதனால் நாமும் நம் சந்ததியும் சிறப்பாக எல்லா வளமும் பெற்று வாழ்வோம் என்பது நம்பிக்கை.
மார்கழி அமாவாசை விரதம் துவங்க நல்ல நேரம்...
2024ஆம் ஆண்டின் முதல் அமாவாசை ஜனவரி 11ஆம் தேதி வியாழக்கிழமை வருகிறது. ஜனவரி 10ஆம் தேதி இரவு 8.05 மணிக்கு துவங்கி, ஜனவரி 11ஆம் தேதி மாலை 6.31 மணி வரை அமாவாசை திதி உள்ளது. இதனால் அமாவாசை விரதம் இருப்பவர்கள் ஜனவரி 10ஆம் தேதி இரவு எளிமையான உணவை எடுத்துக் கொண்டு, ஜனவரி 11ஆம் தேதி காலை முதல் விரதத்தை துவக்க வேண்டும். ஜனவரி 11ஆம் தேதி காலை 5.57 முதல் 6.21 வரையிலான நேரம் புனித நீராடுவதற்கும், தானம் வழங்குவதற்கும் நல்ல நேரமாக சொல்லப்பட்டுள்ளது.