ஜம்முவில் ராணுவ ஆம்புலன்ஸ் மீது துப்பாக்கி சூடு!. 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!. பாதுகாப்புப் படை அதிரடி!
Army Ambulance: ஜம்முவின் அக்னூர் பகுதியில் அமைந்துள்ள பட்டால் என்ற இடத்தில் ராணுவ ஆம்புலன்ஸ் மீது திங்கள்கிழமை (அக்டோபர் 28) காலை தாக்குதலில் ஈடுபட்ட மூன்று தீவிரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றனர்.
ஜம்மு - காஷ்மீரின் அக்னூர் செக்டாரில் நேற்று காலை எல்லைக்கட்டுப்பாடு கோடு அருகே உள்ள கிராமம் வழியாக ராணுவ கன்வாய் சென்று கொண்டிருந்தது. அப்போது, கோயில் ஒன்றில் பதுங்கி இருந்த தீவிரவாதிகள் கன்வாய் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் கன்வாயின் ஒரு பகுதியாக சென்று கொண்டிருந்த ஆம்புலன்சை குறிவைத்து துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. சுமார் 10க்கும் மேற்பட்ட முறை துப்பாக்கியால் சுடப்பட்டது. இந்த துப்பாக்கி சூட்டில் உள்ளே இருந்த வீரர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் உயிர் தப்பினார்கள்.
தீவிரவாதிகள் தாக்குதலை அடுத்து கோரின் பட்டால் பகுதியில் வீரர்கள் குவிக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர். 6 மணிநேரம் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர். இதில், 3 தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும், மூன்று தீவிரவாதிகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், அவர்களின் அடையாளங்கள் இன்னும் அறியப்படவில்லை என்றும் வட்டாரங்கள் கூறுகின்றன.
தடை செய்யப்பட்ட ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்றும், பாகிஸ்தானில் இருந்து மனவார் தாவி ஆற்றைக் கடந்து பட்டாலுக்குள் நுழைந்திருக்கலாம் என்றும் பாதுகாப்புப் படையினரும் போலீஸாரும் சந்தேகிக்கின்றனர்.தேடுதல் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், அப்பகுதி சீல் வைக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரில் சமீபகாலமாக தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலை தொடர்ந்து இந்த சம்பவம் நடந்துள்ளது.