3 நாட்களில் 2வது தீவிரவாத சம்பவம்..! 2 பொதுமக்கள் பலி..! என்கவுன்டரில் தீவிரவாதி சுட்டுக்கொலை..!
Kathua Encounter: ஜம்மு காஷ்மீர் கதுவா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில் தீவிரவாதி ஒருவன் கொல்லப்பட்டான். தீவிரதாக்குதலில் கிராம மக்களில் 2 பேர் பலி. புதிய அரசு பதவியேற்ற 3வது நாளில் 2 தீவிரவாத தாக்குதல் சம்பவம் அரங்கேறியிருப்பது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் கதுவா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு தாக்குதலை நடத்தியுள்ளனர். தண்ணீர் கேட்பதாக கூறி ஹிராநகர் பகுதியில் உள்ள சேடா சோஹல் கிராமத்திற்குள் புகுந்து பயங்கரவாதிகள் சரமாரியாகத் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதையடுத்து, அங்கு விரைந்த பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பதிலடி என்கவுன்டரில் பதுங்கி இருந்த தீவிரவாதிகளில் ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டான். இதேபோல் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் கிராம மக்களில் இருவர் பலியாகினர். மேலும் தீவிரவாதிகள் அப்பகுதியில் பதுங்கியிருப்பதாக கூறப்படுவதால் தேடுதல் வேட்டை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தீவிரவாதிகள் தாக்குதல் சம்பவத்தையடுத்து, மத்திய அமைச்சரும், உதம்பூர் எம்பியுமான ஜிதேந்திர சிங், நிலைமையைக் கண்காணிக்க கதுவா மாவட்ட ஆட்சியருடன் "தொடர்ந்து தொடர்பில்" இருப்பதாகக் கூறினார். மேலும் தாக்குதலுக்கு உள்ளான வீட்டின் உரிமையாளரிடம் தொலைபேசியில் தொடர்கொண்டு பேசியதாகவும், பாதுகாப்புப்படையினரிடன் பதிலடி தாக்குதலை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் மத்திய அமைச்சர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
புதிய அரசு பதவியேற்ற இரண்டு நாட்களில் ஜம்முவில் நடந்த இரண்டாவது தீவிரவாத தாக்குதல் இதுவாகும். ஞாயிற்றுக்கிழமை, ரியாசி மாவட்டத்தில் யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற பேருந்தை இலக்கு வைத்து நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில், ஒன்பது பேர் உயிரிழந்தனர் மற்றும் 38 பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 2021 முதல், ரஜோரி மற்றும் பூஞ்ச் மாவட்டங்களில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 38 ராணுவ வீரர்களும், 11 பொதுமக்களும் கொல்லப்பட்டுள்ளனர்.
Readmoe: 30 நிமிடங்களுக்கு மேல் ஒரே இடத்தில் அமர்ந்திருந்தால் உடல் எடை அதிகரிக்கும்!