அண்ணாமலை அதிரடி...! எத்தனை வழக்கு வேண்டுமானாலும் போடுங்க... உண்மையை தொடர்ந்து பேசுவேன்...!
மறைந்த முதலமைச்சர் அண்ணாதுரை, முத்துராமலிங்க தேவரை பற்றி அவதுறாக பேசிய புகாரில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்ய கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். அதே போல சேலத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு தொடர சேலம் மாவட்ட ஆட்சியர் அனுமதி கோரிய நிலையில், தற்போது அதற்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எத்தனை வழக்குகளை போட்டாலும் உண்மைகளை அம்பலப்படுத்திக் கொண்டே இருப்பேன் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில்; கடந்த 3 ஆண்டுகளில், திமுக அரசு என் மீதும், எங்கள் பாஜக நிர்வாகிகள் மீதும் உண்மையைப் பேசியதற்காக ஏராளமான வழக்குகளைத் தொடுத்துள்ளது. தற்பொழுது மீண்டும் என் மீது வழக்குத் தொடர அனுமதி வழங்கியது. கடந்த காலத்தில் நடந்த ஒரு நிகழ்வை நினைவுபடுத்தியதற்காக வழக்குத் தொடர தடைகள் பிறப்பிக்கப்பட்டது. போதைப்பொருள் வியாபாரிகளுக்கு கட்சி பதவிகளை வழங்கியது, தமிழகத்தில் உள்ள இந்த திமுக அரசின் உண்மையான முகத்தை பிரதிபலிக்கிறது.
1956ல் தெய்வத்திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கூறியதை, மக்களின் நினைவுகளில் இருந்து துடைத்தெறிய விரும்பிய திமுக அரசுக்கு மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். திமுக அரசுக்கு நான் சொல்லும் செயதி... உண்மை என்ன என்பதை அம்பலப்படுத்துவதை உங்களால் தடுக்க முடியாது. எத்தனை வழக்குகள் வேண்டுமானாலும் போடுங்கள் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.