ஃபெஞ்சல் புயல்.. கன மழையால் பாதித்தவர்களுக்கு இழப்பீடு..!! - இன்று ஆலோசனை நடத்துகிறார் முதல்வர்
மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, பயிர்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து, இன்று தலைமை செயலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட உள்ளது. புயல் பாதிப்பை பார்வையிட மத்திய குழுவை அனுப்பும்படி, மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்,'' என, முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஃபெஞ்சல் புயல், புதுச்சேரி அருகே 30-ம் தேதி இரவு 10.30 முதல் 11.30 மணி அளவில் கரையைக் கடந்தது. இதன் காரணமாக புதுச்சேரி மற்றும் அதனை சுற்றியுள்ள தமிழகப் பகுதிகளில் அதிகனமழை பெய்துள்ளது. அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் 51 செ.மீ. புதுச்சேரியில் 49 செ.மீ. புதுச்சேரியின் பத்துக்கண்ணுவில் 45 செ.மீ. திருக்கனூரில் 43 செ.மீ. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் 37 செ.மீ. நேமூரில் 35 செ.மீ. புதுச்சேரி பாகூர், விழுப்புரம் மாவட்டம் வல்லத்தில் 32 செ.மீ. செம்மேடில் 31 செ.மீ. வளவனூர், கோலியனூரில் 28 செ.மீ. விழுப்புரத்தில் 27 செ.மீ. செஞ்சி, கெடாரில் 25 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
ஃபெஞ்சல் புயல், கனமழையால் விழுப்புரம், செங்கல்பட்டு, கடலூர் என பல மாவட்டங்களில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே டெல்டா மாவட்டங்களில் பெய்த மழையால் பயிர்கள் பலத்த சேதம் அடைந்துள்ளன. இந்நிலையில், புயல் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய மத்திய குழுவை அனுப்பும்படி, மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் என, முதல்வர் ஸ்டாலின் கூறினார். மேலும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், பயிர்களுக்கும் இழப்பீடு வழங்குவது தொடர்பாக இன்று மாலை தலைமை செயலகத்தில் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொள்ள உள்ளார். கடந்த ஆண்டு மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.6000 நிவாரணம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Read more ; ஆண்களுக்கு மார்பக புற்றுநோய் இருப்பது சாத்தியமா? அறிகுறிகள்.. காரணங்கள் என்னென்ன?