கர்நாடகாவை உலுக்கும் ஆபாச வீடியோக்களில் "பெண் அரசு அதிகாரிகள்"..! பெண் அளித்த பாலியல் புகார்..! சிக்குவாரா முன்னாள் பிரதமரின் பேரன்..!
கர்நாடக மாநிலத்தில் கடந்த 26-ம் தேதி நாடாளுமன்ற லோக்சபா தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில், இந்தியாவின் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், முன்னாள் அமைச்சரும், ஜே.டி(எஸ்) தலைவருமான ஹெச்.டி.ரேவண்ணாவின் மகனுமான பிரஜ்வல் ரேவண்ணா காங்கிரஸின் ஷ்ரேயாஸ் எம்.படேலை எதிர்த்துப் போட்டியிட்டார்.
கர்நாடகா மாநிலத்தில் ஜே.டி(எஸ்) பா.ஜ.க-வுடன் கூட்டணியில் இருக்கிறது. இந்த நிலையில், தேர்தலுக்கு சில தினங்களுக்கு முன்பு, பிரஜ்வல் ரேவண்ணாவின் பாலியல் வீடியோக்கள் இணையத்தில் பரவி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சமூக வலைதளங்களில் உலா வரும் அந்த ஆபாச வீடியோக்களில் சில பெண் அரசு அதிகாரிகளும் இருக்கின்றனர். இதனால் இந்த பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ளது. எனினும், இவை அனைத்தும் மார்பிங் செய்யப்பட்ட போலி வீடியோக்கள் என்று பிரஜ்வல் ரேவண்ணா தரப்பு இதனை மறுத்துள்ளது. இதற்கிடையில், மாநில மகளிர் குழுவின் தலைவி நாகலட்சுமி சவுத்ரி, அந்த வீடியோ தொடர்பாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் சித்தராமையாவுக்குக் கடிதம் எழுதினார்.
அதைத் தொடர்ந்து, கர்நாடக முதல்வர் சித்தராமையா தன் எக்ஸ் பக்கத்தில், ``பிரஜ்வல் ரேவண்ணா தொடர்பான ஆபாச வீடியோ குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைக்க அரசு முடிவு செய்திருக்கிறது. அந்த வீடியோ கிளிப்களில் பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பதாக தெரிகிறது. எனவே, கர்நாடக மாநில மகளிர் ஆணையம், வியாழக்கிழமை, சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைக்குமாறு கேட்டுக் கொண்டது. அவர்களின் கோரிக்கையை ஏற்று இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், ``பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள் ஜே.டி(எஸ்) தலைவர்கள் மீது மட்டும் இல்லை. (கர்நாடக பா.ஜ.க தலைவர்) பி.ஒய்.விஜயேந்திரா மற்றும் பலர் இது தொடர்பாக பதிலளிக்க வேண்டும். மகளிர் ஆணையம் தங்கள் பெயரைக் கெடுக்க முயற்சிப்பதாக அவர்கள் கூறிய செய்திகளைப் படித்தேன். இப்படிப் பேசி குமாரசாமி பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை நியாயப்படுத்துகிறாரா?" எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
இந்த நிலையில், ஜே.டி(எஸ்) தலைவர் பிரஜ்வல் ரேவண்ணா நாட்டை விட்டு வெளியேறிவிட்டதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்திருக்கிறது என கர்நாடக முதல்வர் அலுவலகம் தெரிவித்திருக்கிறது. இதனிடையே, பெண் ஒருவர் பிரஜ்வல் ரேவண்ணாவிற்கு எதிராக பாலியல் புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரின் பேரில் பிரஜ்வல் ரேவண்ணாவிற்கு எதிராக ஹசன் மாவட்டத்தில் உள்ள ஹோலனரசிபுர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
“RSS அமைப்பு இட ஒதுக்கீட்டிற்கு ஆதரவளிக்கும்…” ஹைதராபாத் பிரச்சாரக் கூட்டத்தில் மோகன் பகவத் உறுதி.!!