பெண் மருத்துவர் வன்கொடுமை, கொலை!. உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு!. தலைமை நீதிபதி அமர்வில் நாளை விசாரணை!
Doctor Rape: நாட்டையே உலுக்கிய கொல்கத்தா பெண் பயிற்சி டாக்டர் கொலை விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிந்துள்ளது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வில் நாளை விசாரணைக்கு வர உள்ளது.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவமனையில் கடந்த 8ம் தேதி இரவுப் பணியில் இருந்த முதுகலை 2ம் ஆண்டு படித்த பெண் பயிற்சி டாக்டர் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அவரது சடலம் மருத்துவமனை கருத்தரங்கு அறையில் கண்டறியப்பட்டது. இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதை கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்கள் வலுத்துள்ளன. இந்த விவகாரத்தில் சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் பலருக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. இது குறித்து சிபிஐ தீவிர விசாரணை நடத்தி வருகிறது. இதற்கிடையே, நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த வழக்கு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு நாளை விசாரணைக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் ஏற்கனவே கொல்கத்தா உயர் நீதிமன்றம் வழக்கை விசாரித்து வருகிறது. கடந்த வாரம் நடந்த விசாரணையின் போது, மாநில போலீசாரிடம் இருந்து வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. நாடு முழுவதும் மருத்துவமனைகளில் பெண் டாக்டர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமென்ற கோரிக்கை வலுத்துள்ள நிலையில் உச்ச நீதிமன்றம் வழக்கை தாமாக எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Readmore: சூப்பர் திட்டம்…! ஆடுகள் வாங்குவதற்கு ரூ.15,000 மானியம் வழங்கும் தமிழக அரசு…!