இன்று முதல் JioCinema-வில் ஐபிஎல் போட்டிகளை பார்க்க கட்டணம்..! முழு விவரம்..!
ஒட்டுமொத்த இந்தியாவும் 2024 ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை இலவசமாக பார்க்க ஜியோ சினிமா ஆப்பை (Jio Cinema) பயன்படுத்தி கொண்டிருக்கும் வேளையில், முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் நிறுவனம், ஜியோ சினிமா ஆப்பிற்கான புதிய கட்டண சந்தா திட்டத்தை ஏப்ரல் 25ஆம் தேதியன்று அறிமுகப்படுத்த உள்ளது.
எக்ஸ் (X) தளம் வழியாக, ஜியோ சினிமா ஆப்பிற்கான புதிய சந்தா திட்டத்தின் வருகையை ஜியோ நிறுவனம் உறுதி செய்திருக்கிறது. இது குறித்த பதிவில், ஜியோ சினிமா ஆப்பிற்கான புதிய சந்தா திட்டமானது பயனர்களுக்கு விளம்பரமில்லாத அனுபவத்தை வழங்குகிறது. ஸ்ட்ரீமிங்ஸ் செய்யும் போது இடையில் தோன்றும் விளம்பரங்களை பார்த்து மக்கள் சோர்வாக இருப்பது போன்றும், அதை சரிசெய்ய ஏப்ரல் 25ஆம் தேதியன்று புதிய விளம்பரமில்லாத சந்தா திட்டம் அறிமுகமாக உள்ளதும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், ஜியோவின் இந்த விளம்பரம் பேமிலி பிளான் ஒன்று அறிமுகமாகும் என்பதையும் குறிக்கிறது. இதுதவிர்த்து ஜியோ நிறுவனமானது வேறு எந்த விவரங்களையும் வெளியிடவில்லை. ஐபிஎல் போட்டிகளானது நிறைய விளம்பரங்களை கொண்டிருப்பதாலும், ஜியோ நிறுவனமானது விளம்பரங்கள் இல்லாத புதிய திட்டத்தை அறிமுகப்படுத்த தயாராகி வருவதால், இனி ஐபிஎல் போட்டிகளை ஜியோ சினிமா வழியாக பார்ப்பதற்கு கட்டணம் வசூலிக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன.
தற்போது ஜியோ சினிமா, ஐபிஎல் போட்டிகளை இலவசமாக பார்க்க அனுமதிக்கிறது. இருப்பினும் இந்த இலவச சேவை விளம்பரங்களால் நிரம்பி உள்ளது. ஆனால், ஏப்.25ஆம் தேதி அறிமுகமாகும் புதிய சந்தா திட்டத்தின் கீழ் இந்த நிலை தலைகீழாய் மாறக்கூடும். ஏனென்றால், இந்த திட்டம், குறிப்பிட்ட சந்தா தொகையின் கீழ் விளம்பரமில்லாத ஸ்ட்ரீமிங்கை வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ளது. ஆனால், சரியாக எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரியவில்லை.
தற்போது ஜியோ சினிமா ஆப் ஆனது 2 திட்டங்களை கொண்டுள்ளது. ஒரு ஆண்டு சந்தாவுக்கு ரூ.999 கட்டணம் செலுத்த வேண்டும் மற்றும் 1 மாத சந்தாவுக்கு ரூ.99 செலுத்த வேண்டும். இவை இரண்டுமே கட்டண சந்தாவாக இருக்கும் போதிலும் கூட, பணம் செலுத்திய பிறகும், நீங்கள் பிரீமியம் பயனராக இருந்தாலும் கூட, இவை முற்றிலும் விளம்பரம் இல்லாத திட்டங்கள் அல்ல என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
ஏப்ரல் 25 ஆம் தேதி அறிமுகமாகும் புதிய ஜியோ சினிமா திட்டமானது 4கே ரெசல்யூஷனில் கன்டென்ட்-ஐ பார்க்கவும், அவற்றை பதிவிறக்கம் செய்யவும் பயனர்களை அனுமதிக்கும் என்கிற வதந்தியும் பரவி வருகிறது. இது எந்த அளவிற்கு உண்மையாக இருக்கும் என்பது இன்னும் சில தினங்களில் தெரிந்துவிடும்.