வீட்டு மனைகளை முறைப்படுத்த பிப்ரவரி 29-ம் தேதி கடைசி நாள்...! அமைச்சர் முத்துசாமி அறிவிப்பு...!
அனுமதியற்ற மற்றும் வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் 20.10.2016 அன்று அல்லது அதற்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட மனைப்பிரிவில் அமையும் விற்கப்பட்ட மற்றும் விற்கப்படாத அனைத்து மனை மற்றும் மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த, ஏற்கனவே வெளியிடப்பட்ட அரசாணைகளில் குறிப்பிடப்பட்டுள்ள 2017-ம் ஆண்டு விதிகளுக்கு உட்பட்டு எவ்வித மாற்றமும் இல்லாமல் 29.02.2024 வரை விண்ணப்பிக்க தமிழக அரசு ஏற்கனவே கால நீட்டிப்பு செய்துள்ளது. இந்த நிலையில் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படும் என்று அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பெண் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்; ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படும். கட்டிடங்களின் உயரத்தை 12 மீட்டரிலிருந்து 14 மீட்டராக அனுமதிக்க வேண்டும் என்றகோரிக்கை அனுமதிக்கப்படுகிறது. திறந்தவெளி இருப்பு விதிமுறைகளில் எந்த தளர்வும் செய்யப்பட மாட்டாது.
நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்தில் விலக்கப்பட்ட பகுதிகளை, மீண்டும் சேர்ப்பது குறித்த பொதுமக்களின் பரிந்துரைகள் பரிசீலிக்கப்படும். 2016-ம் ஆண்டுக்கு முன்னர் உருவாக்கப்பட்ட, அங்கீகரிக்கப்படாத வீட்டுமனைகளை முறைப்படுத்த பிப்ரவரி 29-ம்தேதி கடைசி நாளாகும். அங்கீகாரம் பெறாத மனைகளின் உரிமையாளர்கள் 10 சதவீத நிலத்தை அரசிடம் ஒப்படைத்து, உரிய அனுமதியைப் பெறலாம் என கூறினார்.