5 வயது குழந்தையை அடித்துக் கொன்ற தந்தை.! உடலை துண்டுகளாக வெட்டி ஃப்ரீசரில் வைத்த தந்தை.! அதிர்ச்சியில் உறைய வைக்கும் சம்பவம்.!
அமெரிக்காவில் ஒரு தந்தை தனது 5 வயது மகளை கொன்று உடலை துண்டுகளாக வெட்டி, தான் வேலை செய்யும் உணவகத்தின் ஃபிரீசரில் மறைத்து வைத்திருக்கிறார். பின்னர் பல மாதங்கள் கழித்து அந்த வெட்டப்பட்ட உடலை குப்பையை போல் அப்புறப்படுத்தி இருக்கிறார். தற்போது அவருக்கு 30 ஆண்டுகாலம் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவளித்தது. இந்தக் கொடூர செயலால் அந்த நாடே அதிர்ச்சியுற்றது.
அமெரிக்காவில் உள்ள நியூ ஹாம்ஸ்பைர் மாநிலத்தில், 34 வயதான ஆடம் மாண்ட்கோமெரி, ஒரு உணவகத்தில் சமையல்காரர் ஆகவும் பாத்திரம் கழுவுபவராகவும் பணிபுரிந்து வந்தார். இவர் போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர். அவருக்கு தனது முன்னாள் மனைவியான கிரிஸ்டல் சோரியின் மூலமாக ஹார்மனி என்று 5 வயது பெண் குழந்தை இருந்தார். 2019 முதல் அந்த குழந்தையை காணவில்லை. இரண்டு வருடங்கள் கழித்து 2021இல் இதுகுறித்து அவரது தாய் வழக்கு தொடுத்தார்.
அந்த வழக்கு தற்போது விசாரணைக்கு வந்த நிலையில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிவந்துள்ளன. முதல் மனைவியை பிரிந்த பின்பு, கெய்லா மாண்ட்கோமரி என்ற பெண்ணை ஆடம் மணந்திருக்கிறார். வீடு இல்லாத நிலையில் இவர்கள் காரிலேயே வசித்து வந்துள்ளனர். ஹார்மனி இறந்ததாக சந்தேகிக்கப்படுகின்ற நாளான, டிசம்பர் 7 2019இல், குழந்தை தூக்கத்திலேயே மலம் கழித்திருக்கிறார். அதனால் ஆத்திரமடைந்த ஆடம் குழந்தையை பலமாக அடித்து அடித்திருக்கிறார்.
பின்னர் குழந்தை மூர்ச்சையுற்றதை கவனிக்காமல் உணவருந்தி விட்டு போதைப்பொருளையும் பயன்படுத்தி இருக்கிறார். குழந்தை இறந்ததை உணர்ந்த பின்பு, குழந்தையின் உடலை ஒரு பெரிய பையில் போட்டு வைத்திருக்கிறார். பின்னர் குழந்தையின் உடலை துண்டு துண்டாக வெட்டி, தான் வேலை செய்யும் உணவகத்தில் உள்ள ஃப்ரீசரிலும் வைத்துள்ளார். தினமும் அவர் ஒரு பையில் பொருளை கொண்டு வருவதையும், வேலை முடித்து செல்லும்போது அதை எடுத்துச் செல்வதையும் பலர் கவனித்திருக்கின்றனர். ஆனாலும் அந்தப் பையில் குழந்தையின் வெட்டப்பட்ட துண்டுகள் இருந்திருக்கும் என்று யாரும் கற்பனை கூட செய்யவில்லை.
தனது மாமியாரின் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள கூலரிலும், தனது நண்பரின் கார் டிரங்க்கிலும், ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் ஃப்ரீசரிலும் தனது குழந்தையின் வெட்டப்பட்ட உடலை மறைத்து வைத்துள்ளார். மேலும் வெட்டப்பட்ட அந்த உடலை பல மாதங்கள் வைத்திருந்து, பல மறைவிடங்களுக்கு சென்று 'நேற்றைய குப்பை போல்' அதனை அப்புறப்படுத்தி இருக்கிறார் என்று வழக்கறிஞர் கிறிஸ்டோபர் நோல்ஸ் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
சிறுமியின் இறப்பை பற்றி அவரது மாற்றான் தாய் கெய்லா அறிந்திருந்தாலும், அந்த உண்மையை மறைத்து சிறுமியின் சார்பாக நலத்திட்ட உதவிகளைப் பெற்றதாகவும் குற்றம் சாட்டப்பட்டார். எனவே அவருக்கு 18 மாதங்கள் சிறை தண்டனையை நீதிமன்றம் அறிவித்தது.
தான் செய்த குற்றங்களை ஆடம் ஒப்புக்கொண்ட நிலையில், தனது மகளைக் கொன்றது, இறந்த உடலை துஷ்பிரயோகம் செய்தது, தாக்குதல் மற்றும் சாட்சிகளின் குறுக்கீடு ஆகிய குற்றச்சாட்டுகளுக்காக ஆடம் மாண்ட்கோமெரிக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த கொடூர சம்பவம் அந்த நாட்டு மக்களை அதிர்ச்சியில் உறையச் செய்தது.