Crop Insurance: விவசாயிகள் ஜூலை 31-ம் தேதி வரை பயிர் காப்பீடு செய்ய கால அவகாசம்...!
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2024-2025-ம் ஆண்டு காரீப் பருவத்தில் பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு திட்டத்தில் பயன் பெற விண்ணப்பிக்கலாம்.
விவசாயிகள் செலுத்த வேண்டிய பிரீமியம் தொகை எக்டர் ஒன்றுக்கு நெல் பயிருக்கு ரூ.1,704 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அறிவிக்கை செய்யப்பட்ட காப்பீடு அலகுகளில் காப்பீடு பதிவு செய்ய இயல்பான விதைப்பு பருவம் நெல் பயிருக்கு மே, ஜூன் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் இத்திட்டத்தில் சேர்ந்து பயன் பெற பதிவு செய்ய கடைசி நாள் ஜூலை 31 எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 2024-2025-ம் ஆண்டு பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு திட்டம் அக்ரிகல்ச்சர் இன்சூரன்ஸ் கம்பெனி இந்தியா லிமிடெட், பொதுக்காப்பீடு நிறுவனம் மூலம் செயல்படுத்தப்படுகிறது.
விவசாயிகள் இத்திட்டத்தில் சேர முன்மொழிவு படிவம். பதிவு படிவம், சிட்டா, அடங்கல், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் விதைப்புச் சான்று, ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தகத்தின் முன்பக்க நகல் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும். விருப்பமுள்ள விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள பொது சேவை மையங்கள் மூலம் இணையதளத்தில் பதிவு செய்யலாம். மேலும், விவரங்களுக்கு தங்கள் வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்கள் மற்றும் வேளாண்மை துறை அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.