பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் மருத்துவமனையில் அனுமதி..!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், வர்ணனையாளருமான லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து "எக்ஸ்" வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள க்ஷ்மன் சிவராமகிருஷ்ணன், வாழ்க்கை கடினமாகிவிட்டது என்றதுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவை கண்ட ஒருவர் விரைவில் குணமாக வேண்டும் என்று கூறியதற்கு, "அது நடக்கும் என்று நான் நினைக்கவில்லை" என்று பதில் கூறியுள்ளார் லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன். அவரின் இந்த பதில் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மேலும் லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன் உடல்நிலை குறித்து எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. தற்போது 58 வயதாகும் லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன், வலது கை சுழற் பந்துவீச்சாளர் ஆவார். 1981-82ல் தனது 15வது வயதில் டெல்லிக்கு எதிராக தமிழ்நாடு அணிக்காக ரஞ்சியில் அறிமுகமானபோது 7/28 என்ற சிறப்பான ஆட்டம் அவரை தேசிய அளவில் பிரபலப்படுத்தியது.
அடுத்த வருடத்தில் அவர் பாகிஸ்தான் சுற்றுப்பயணத்திற்கான அணியில் இருந்தார், மேலும் அவர் ஆன்டிகுவாவில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக அறிமுகமானபோது 17 வயது கூட இல்லை. அந்த போட்டியில் அவர் விக்கெட் எதுவும் எடுக்காமல் திரும்பினார், ஆனால் 1985 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், 19 வயதில் விளையாட்டின் இரண்டு வடிவங்களிலும் வெற்றி பெற்ற பிறகு உலகின் முதலிடத்தில் இருந்தார். அவர் ஆஸ்திரேலியாவில் மகத்தான வெற்றியைப் பெற்றார் மற்றும் இங்கிலாந்துக்கு எதிராக 23 விக்கெட்டுகளை வீழ்த்தி தொடர் நாயகன் விருதையும் வென்றுள்ளார்.
2000 ஆண்டு முதல் வர்ணனையாளராக இருந்து வருகிறார். மேலும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் கிரிக்கெட் கமிட்டியில் வீரர்களின் பிரதிநிதிகளில் ஒருவராகவும் பணியாற்றுகிறார். லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன் விரைவில் குணமடைய ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.