பணியில் இருக்கும் போது உயிரிழக்க நேர்ந்தால் குடும்ப நிதி ரூ.10 லட்சமாக உயர்வு...!
பணியில் இருக்கும்போது உயிரிழக்க நேர்ந்தால் பத்திரிகையாளர் குடும்ப நிதி ரூ.10 லட்சமாக உயர்த்தி முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
பத்திரிகை துறையில் பணியாற்றும் ஆசிரியர், உதவி ஆசிரியர், நிருபர், புகைப்படக்காரர், பிழை திருத்துவோர் பணிக் காலத்தில் உயிரிழந்தால், அவர்கள் குடும்பத்திற்கு, முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து, குடும்ப நிதியுதவி வழங்கப்படுகிறது. இது, 5 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என, செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன், சட்டசபையில் அறிவித்தார். இதன்படி, பத்திரிகையாளர்கள் 20 ஆண்டுகள் பணிபுரிந்து இறந்தால், அவர்கள் குடும்பத்துக்கு 5 லட்சம்; 15 ஆண்டுகள் பணிபுரிந்து இறந்தால் 3.75 லட்சம்; 10 ஆண்டுகள் பணிபுரிந்து இறந்தால் 2.50 லட்சம்.ஐந்து ஆண்டுகள் பணிபுரிந்து இறந்தால் 1.25 லட்சம் ரூபாய், என, குடும்ப உதவி நிதியை உயர்த்தி, கடந்த 2021-ம் ஆண்டு அரசாணை வெளியிடப்பட்டது.
இந்த நிலையில் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தினர் முதலமைச்சர் அவர்களுக்கு விடுத்துள்ள பல்வேறு கோரிக்கைகளில் ஒன்றாக பத்திரிகையாளர்கள் மரணமடைந்தால் அவர்களுடைய குடும்பத்திற்கு வழங்கப்படும் நிவாரண நிதியினை பத்து லட்சமாக உயர்த்த வேண்டும் என கோரியிருந்தனர். அரசின் கவனமான பரிசீலனைக்கு பின்னர், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் பத்திரிகையாளர் குடும்ப உதவி நிதியானது, பத்திரிகையாளர்கள் 20 ஆண்டுகள் பணிபுரிந்து, பணியில் இருக்கும் போது இயற்கை எய்தி விடுவார்களேயானால் அவர்களுடைய குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் என்றும், 15 ஆண்டுகள் பணிபுரிந்து, பணியில் இருக்கும் போது இயற்கை எய்தி விடுவார்களேயானால் ரூ7,50,000 வழங்கப்படும்.
10 ஆண்டுகள் பணிபுரிந்து, பணியில் இருக்கும் போது இயற்கை எய்தி விடுவார்களேயானால் ரூ.5 லட்சம், 5 ஆண்டுகள் பணிபுரிந்து, பணியில் இருக்கும் போது இயற்கை எய்தி விடுவார்களேயானால் ரூ.2.5 லட்சம் வழங்கப்படும். நடைமுறையிலுள்ள விதிகளின்படி, பத்திரிகையாளர் குடும்ப உதவி நிதியினை உயர்த்தி வழங்கிட அரசு ஆணையிட்டுள்ளது.
நிதியுதவி பெற உரிய சான்றிதழ்களுடன், சம்பந்தப்பட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வழியாக, மாவட்ட கலெக்டரின் பரிந்துரை பெற்று, செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குனருக்கு விண்ணப்பிக்க வேண்டும். பத்திரிகையாளர் ஓய்வூதிய பரிசீலனைக் குழுவே, இத்திட்டத்தின் கீழ் உதவி பெறுவதற்கான விண்ணப்பங்களை பரிசீலிக்கும். அந்தக் குழுவின் பரிந்துரை அடிப்படையில் ஆணைகள் வெளியிடப்படும்.இத்திட்டத்திற்கான செலவினங்கள், முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும். குடும்ப உதவி நிதி திட்டம், அரசாணை வெளியிட்ட நாளில் இருந்து அமல்படுத்தப்படும்.