பெற்றோர் கவனத்திற்கு..! கிருஷ்ணகிரியில் போலி NCC முகாம்... என்சிசி இயக்குநரகம் விளக்கம்..!
கிருஷ்ணகிரியில் போலி என்சிசி முகாம் தொடர்பாக என்சிசி இயக்குநரகம் விளக்கம் அளித்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு, புதுச்சேரி வட்ட என்சிசி இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் என்சிசி அதிகாரிகள் என்று கூறி கொண்டு சில தனி நபர்கள் நடத்திய போலி என்சிசி முகாமில் பங்கேற்ற பள்ளி மாணவிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டதாக, 2024 ஆகஸ்ட் 19-ம் தேதி அன்று ஊடகங்களில் ஒரு செய்தி வெளியாகி உள்ளது.
இந்த சம்பவம் தேசிய மாணவர் படையுடன் (என்சிசி) இணைக்கப்பட்ட அல்லது பதிவு செய்யப்பட்ட கல்வி நிறுவனங்களுடன் தொடர்புடையதல்ல என்பதை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறோம். இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபர்களுக்கும், என்சிசிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. மேலும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் என்சிசி முகாம் எதுவும் நடத்தப்படவில்லை.
ஊடகங்களில் வெளியாகி உள்ள செய்தி தவறான தகவல்கள் அடிப்படையில், என்சிசி அதிகாரிகளை இந்த சம்பவத்துடன் தொடர்புபடுத்தும் தவறான நோக்கில் வெளியிடப்பட்டுள்ளதாகவும், தமிழ்நாடு, புதுச்சேரி வட்ட என்சிசி இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.